உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம் – ஜனாதிபதி

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் போதைப்பொருள் தொடர்புப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

30 வருட கால யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் இந்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகள் பிரபாகரனும் போதைப்பொருள் மூலமே வருமானத்தை பெற்றனர். தற்பொழுது சர்வதேச ரீதியில் பயங்கரவாதிகள் இந்த போதைப்பொருள் மூலம் வருமானத்தை பெற்று வருகின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை எதிர்ப்போர் நாட்டில் எதிர்கால இளம் சமூகத்தினரை சீரழிக்கும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக எத்தகையவற்றை செய்துள்ளார்கள் என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இதன் பிரதான மகாநாடு இன்று (01) பிற்பகல் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி இதில் உரையாற்றினார். அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் உள்ள முழு மாநிலங்களிலும் போதைப்பொருள் குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அங்கு நான்கு மாநிலங்களில் மாத்திரம் போதைப்பொருள் குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.

இதனை கருத்திற்கொண்டு இந்த விடயத்தை வலியுறுத்தினார். இதே போன்று உலக நாடுகளிலும் போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதை கூறியிருந்ததை இதன்போது சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருளை தடுப்பதற்காக நான் ஜனாதிபதியான பின்னர் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. 1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பிரவேசிப்பதற்கு முன்னர் நான் ஒரு சாதாரண அரச ஊழியராகவே பணிபுரிந்தேன். எனது இந்த ஊழியர் தரத்துடன் எனது கிராமத்தில் கள்ளச்சாராயம் போன்ற மதுபாவணைக்கு எதிராக செயல்பட்டேன். அப்பொழுது கள்ளச்சாராயம் கஞ்சா போன்றவற்றை பயன்படுத்தியோரை தடுத்து நல்வழிப்படுத்துவதில் ஈடுபட்ட போது இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தோர் எனக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்தனர். இந்த அச்சுறுத்தல் கூட எனது சிறிய பதவியில் இருந்து விலகுவதற்கு காரணமாகக்கூட இருக்கலாம் .

40 வருடங்களுக்கு மேல் இத்துறையில் அனுபவம் உண்டு. என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்காக அன்று செயல்பட்டவர்களும் போதைப்பொருளை ஒழிப்பதற்காக நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அன்றும் தெரிவித்தனர் என்றும் ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டார். போதைப்பொருளினால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் இங்கு உரையாற்றினார். அவரது உரையின் மூலம் நாம் பல விடயங்களை உணரக்கூடியதாக உள்ளது.

சுகாதார அமைச்சர் குறுகிய உரையை நிகழ்த்தினார் ஆனால் அதில் முக்கிய கருத்துக்கள் அடங்கியிருந்தது. நாட்டில் உள்ள சிறைக் கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்காக சிறைவாசல் அனுபவிப்பவர்களாவர். சிறைச்சாலைகளில் 24,000 சிறைக் கைதிகள் இருக்கின்றனர். இதில் 15,000 பேர் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களாவர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிகள் பெரும்பாலானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு உள்ளான இளம் பெண்களாவர். ஆனால் இவர்கள் கூறுகின்றனர் தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையில் தள்ளி விட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் நாட்டில் இளம் வயதினர் மத்தியில் போதைப்பொருள் பாவணை அதிகரித்து வருகின்றது. இன்று விஷேடமாக பெரும் சவாலாக இது அமைந்துள்ளது. தண்ணீர் ஒரு போத்தலின் விலையிலும் பார்க்க பியர் ஒரு போத்தலின் விலை குறைவானது. இத்தகைய நிலை நாட்டில் நிலவுகிறது. சிகரட் போன்ற நச்சுத்தன்மை கொண்டவற்றை பயன்படுத்தப்படுவது இந்த போதைப்பொருளுக்கு அடிமையாவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

போதைப்பொருள் பாவணையின் காரணமாக வருடாந்தம் 50,000 பேர் சிறைக்கு செல்கின்றனர். இவர்களில் பெண்கள் அதிகமானோர். பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவணை வேகமாக அதிகரித்து வருகின்றது. சர்வதேச பாடசாலைகள் தொடக்கம் அரசாங்க பாடசாலைகள் வரையில் உள்ள மாணவர்கள் இலவசமாக போதைப்பொருளை பயன்படுத்துவதற்கான பயிற்சியை போதைப்பொருள் கும்பல் வழங்குகின்றது. விஷேடமாக இன்று பல்கலைக்கழகங்களில் இந்த பாவணை இடம்பெற்று வருகின்றது. இனத்தை அழிப்பதற்காக போதைப்பொருள் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமக்கென வரலாற்று ரீதியான பெருமை உண்டு. ஆனால் இன்று அது குறித்து மகிழ்ச்சி அடைய முடியாது. இதற்கு பல பிரச்சினைகள் உண்டு. இதற்கு முக்கியமானது போதைப்பொருள் பிரச்சினையாகும். நாளாந்தம் 10 பேர் வாகன விபத்துக்களால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாகனத்தை செலுத்துவோர் போதைப்பொருளை பயன்படுத்துவதனாலே ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இன்று போதைப்பொருள் பாவணையை தடுப்பதற்கான செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பாடசாலை மாணவர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர் .

இதனாலேயே இன்றைய தினம் நாம் 3500 பாடசாலை இதில் பங்கு கொள்ள செய்துள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறினார். இந்த தருணத்திலாவது இதற்கு நாம் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் மெக்சிகோ மாலைத்தீவு போன்ற நாடுகளை போன்றாகிவிடுவோம்.

உலக நாடுகளில சில அரசாங்கங்களினால் கூட இன்னும் போதைப்பொருள் தடுக்க முடியாதுள்ளது.போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோர் அரசியல்வாதிகளை அழித்து விடுவர். அமெரிக்கா 2018 ஆம் ஆண்டில் இவ்வாறான மரணதண்டனையை 25 பேருக்கு நிறைவேற்றியுள்ளது. இந்தியா சிங்கப்பூர் சீனா ஆகிய நாடுகளிலும் மரணதண்டனை அமுலில் உண்டு.

போதைப்பொருளை தடுப்பதற்கு நான் தலைமை தாங்கி நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக செயல்படுகின்றேன். ஆனால் அரசாங்கத்தில் உள்ள சிலரும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் எதிர்க்கட்சியினரும் எனது இந்த நடவடிக்கைக்கு எதிராக செயல்பட முற்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இது தொடர்பாக என்னுடன் கலந்துரையாடினார். இதன்போது மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் எனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினேன். போதைப்பொருள் பாவணையினால் பாதிக்கப்பட்டோருக்காக 10,12 புனரமைப்பு நிலையங்கள் உண்டு.

இந்த பாவணையை நீடித்தால் புனரமைப்பு நிலையங்களை மேலும் அமைக்க வேண்டி ஏற்படும். இந்த பாவணையின் காரணமாக பாலியல் துஷ்பிரயோகமும் நாட்டில் இடம்பெறுகின்றது. இந்த பாவணை நாட்டை சீரழித்து விடும் என்பதை இவருக்கு தெளிவுப்படுத்தினேன். சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்திற்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்தினத்தன்றே மரணத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான் கைச்சாத்திட்டேன். இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி .பிளஸ் வழங்க மாட்டோமென அச்சுறுத்துகின்றனர். நாட்டின் இறைமையில் தலையிட எவருக்கும் முடியாது. அரசாங்கமும் கட்சியின் கொள்கைக்கு ஏற்ப இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு தெரிவித்துள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.

பொது இடங்களில் சிகரட் பாவணையை தடுப்பதற்காக நாம் சட்டம் கொண்டு வந்த போது சிலர் ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வரமாட்டார்கள் என்று குறை தெரிவித்தனர். ஆனால் இன்று நிலைமை என்ன? சுவிட்ஸ்லாந்திலேயே மனித உரிமைகளை பாதுகாக்கும் தலைமையகம் உண்டு. நான் சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பல முறை ஜெனீவாவிற்கு சென்றுள்ளேன்.

நான் வெளிநாடு செல்லும் பொழுது தனிமையில் அங்கு சுற்றி பார்ப்பது வழமை. ஜெனீவா பஸ் தரிப்பு அமைந்துள்ள இடம் சிகரட் புகை மண்டலமாக எப்பொழுதும் காட்சியளிக்கிறது. ஆனால் இங்கு அவ்வாறான நிலைமை இல்லை. அதனை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொது மக்கள் இந்த போதைப்பொருளை தடுக்க வேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தனர்.

இதற்காக சட்டங்கள் கொண்டு வர முடிந்துள்ளது. மரண தண்டனையும் வழங்க முடிந்துள்ளது. நீதி மன்றமே மரணதண்டனை குறித்து தீர்மானிக்கின்றது. அதனை நிறைவேற்றுவதற்காக கையெழுத்து இடுவது மாத்திரமே எனது கடமை. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக கையெழுத்து இடப்பட்டமை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானவற்றை மேற்கொள்ளாமல் போதைப்பொருள் பாவணையை தடுக்க முடியாது என்றும் பாராட்டியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுகாதார அமைச்சர், போதைப்பொருளுடன் தொடர்புபட்டவர்கள் அரசாங்கத்திலும் இருப்பதாக தெரிவித்துள்ளார் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.(அ)

-தகவல் திணைக்களம்-

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter