ஹாங்கொங், சீனாவிற்கு எதிரான உலகாவிய போரை ஏற்படுத்துமா?

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா எனும் கொடிய நோய் தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு நாடுகளும் எப்படி இத் தொற்றுநோயை தங்கள் நாட்டில் இருந்து இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கும் வேளையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவானது தன் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக எல்லா விடயங்களிலும் எல்லா நாடுகளுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவுடன் அரசியல், பொருளாதாரத் தொடர்புகளைப் பேணும் நாடுகளைக் குறிவைத்து முரண்பாட்டினை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த சில மாதங்களாக இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளுடன் மோதல் நிலையைக் கடைப்பிடித்து வந்த நிலையில் அடுத்த கட்ட நகர்வாக ஹொங்காங் தீவை குறிவைத்துள்ளது.

ஹொங்காங் தீவானது சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இருப்பினும் ஒருநாடு இரு கொள்கைகள் எனும் அடிப்டையில் பிரித்தானிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களுடன் கூடியதாகவும் உலகின் பொருளாதார வளர்ச்சியடைந்த பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

அமெரிக்க சீனா இடையே தென்சீனக் கடல், ஹாங்காங், தைவான் உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் இருந்து வரும் நிலையில் ஹாங்காங்கின் மீது புதிய அதிகாரத்தைச் செலுத்தும் வகையில் சீனா ஒரு சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இயக்கியுள்ளது. இதற்கெதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றப் பிரநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. ஹொங்காங் சீனாவின் ஒரு பிரதேசம் எனவும் ஹொங்காங்கில் முழு இறையாண்மையும் சீனாவிற்கு உள்ளது எனக் கூறி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இதனடிப்படையில் சீனாவிற்கு ஹொங்காங்கின் பொருளாதாரம் என்பது எதிர்வரும் காலங்களில் அவசியமானதொன்றாகக் காணப்படுவதனால் ஹொங்காங்கை தன்வசப்படுத்தும் நோக்கில் சில சட்டங்களை கம்யூனிஸ்ட் அரசாங்கம் வகுத்துள்ளமையினால் ஹொங்காங்கில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரித்தானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹொங்காங் 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

எனினும் ஹாங்காங்கில் சுயாட்சி நடைபெறுவதுடன் சீனா பாதுகாப்பு விவகாரத்தை மட்டும் செயற்படுத்தினால் போதும் என சீனா பிரித்தானியா இடையே உப்பந்த் ஒன்று கையெழுத்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனை மீறும் வகையில் இச்சட்டத்தினை கொண்டு வந்திருப்பதற்கு பல உலக நாடுகள் சீனாவை கண்டித்து வரும் நிலையில் அமெரிக்காவும் அதன் மீது பொருளாதாரத் தடையினை விதிப்பதற்கான முழு ஒப்புதலைப் பிரதிநிதிகள் சபை அளித்திருக்கின்றது.

உலகமே பெரும் ஆபத்தினை எதிர் நோக்கியிருக்கும் இச் சூழ்நிலையில் சீனா என்றொரு தனிபட்ட நாட்டின் அரசியல் நலன்களுக்காக தன்னுடைய அயல் நாடுகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதுடன் தன்னுடைய பாதுகாப்பின் கீழ் இருக்கும் நாடுகளைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து அவற்றை அடிமைப்படுத்தும் நோக்கின் அடுத்த இலக்கை ஹாங்காங் மீது திருப்பியுள்ளது. இந்நிலையில் சீனாவினால் தற்போது இயற்றப்பட்டிருக்கும் புதிய சட்டமானது ஹாங்காங் கொண்டிருக்க வேண்டிய சுதந்திர உரிமைகளைப் பறிப்பதாவே உள்ளது.

மேலும் இச்சட்டமானது ஹொங்காங் மீது சீனா நேரடியாகத் தன்னுடைய அதிகாரத்தை செயற்படுத்தும் எனவும் தேசிய பாதுகாப்பிற்கு எதிரான குற்றங்களைக் கையாளுவதுடன் தனியான தேசிய பாதுகாப்பு அலுவலகம் ஹாங்காங் பிரதேசத்தில் அமையும் எனவும் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து பிரிவினைவாதம் மற்றும் அடிபணிதல் பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் என்பவற்றிற்கு எதிரான கையாளுகைகளை சீனாவிற்கான ஹாங்காங் தேசிய பாதுகாப்புப் பிரிவு செயற்படும் எனவும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சட்டத்தினை ஹாங்காங்கில் கொண்டு வந்த சில மணி நேரங்களிலேயே கைது நடவடிக்கைகள் ஆரம்பித்திருந்த நிலையில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அத்தோடு இதே நிலை நீடித்தால் ஹாங்காங்கில் சுதந்திரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு கம்யூனிச அரசின் சர்வாதிகாரம் அதிகரித்து விடும் எனவும் மாற்றுக் கருத்து என்பதைக் கூறுவோர் மீது கடுமையான சட்டங்கள் பாய்ந்தால் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் என ஹாங்காங் அடிப்படைவாதிகள் வெகுண்டெழுந்து வருகின்றனர்.

உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அமெரிக்கா ஹாங்காங் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றிருக்கும் நிலையில் செனட்சபையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்து இட்டவுடன் அமுலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவுடன் வணிகம் செய்வதில் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி முடிவுக்கு வந்துள்ளது என அறிவித்திருக்கும் நிலையிலேயே இம் முடிவு எட்டப்பட்டுள்ளது. இத்தகைய முடிவானது ஜனநாயகப் போராட்டக்காரர்களை ஒடுக்கும் சீன அதிகாரிகளுடன் வர்த்தகம் செய்யும் வங்கிகளுக்கு தண்டணை வழங்கவும் வகை செய்துள்ளது. அமெரிக்கா சீனாவிற்கு எதிராகக் காய்நகர்த்தி வரும் பின்னனியில் ஹாங்காங்கின் மீதான பொருளாதாரத் தடை விதிக்கப்படுமாயின் சீன நிறுவனங்கள் இதனால் நிச்சயம் பாதிக்கப்படும் என்பது உண்மையே. உலக நிதிச் சந்தையாக விளங்கும் ஹாங்காங்கை சீனா தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்திருப்பது ஒரு நாடு இரு கொள்கை என்ற அடிப்படை தகர்வதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே அமெரிக்காவானது ஹாங்காங் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் பட்சத்தில் உலகத்தின் நிதி மையமாக விளங்கும் ஹாங்ஹங்கின் பொருளாதார நிலை சரிவடைவதற்கான சூழலை ஏற்படுத்தக் கூடும். அத்தோடு சீனா ஹாங்காங் மீது தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்த முற்படும் போது அது பனிப்போர் ஒன்றிற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளதுடன் இத்தகைய கட்டமைப்பு தோற்றம் பெறுவதற்கு சீனா ஹாங்காங், தைவான் மீதான அடக்குமுறையே ஆரம்பப் புள்ளியாகவும் அமையும். மேலும் ஹாங்ஹங்கிற்கு ஆதரவாகப் பல உலக நாடுகள் களமிறங்குமாயின் அது ஒரு போரிற்கு வழிவகை செய்வதாகவே மாறும்.
அதாவது பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகள் சீனாவிற்கு பக்கபலமாக முன்வரும் அதே நேரத்தில் ஹாங்காங்கிற்கு ஆதரவாக அமெரிக்கா, ஆஸதி;ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஓரணியில் திரளுமாயின் அது ஒரு போரிற்கான தோற்றுவாயகவே அமைய வாய்ப்புள்ளது.குறைந்த பட்சம் சீனாவுக்கு எதிரானஅணிதிரட்டல் ஒன்றுக்கான நிலையே சமகால அரசியல் ஒழுங்கில் ஏற்பட்டுவருகிறது. (பிருந்தா மோகனதாஸ்)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter