ஐக்கிய தேசியக் கட்சியின் குழந்தை ஐக்கிய மக்கள் சக்தி! இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

கறைபடியாத கரங்கள் கொண்ட அரசியல் தலைவரே சஜித் பிரேமதாச. அவருக்கு எதிராக எவரும் விரல் நீட்டி குற்றம்சாட்ட முடியாது. அவர் தலைமையில் புதிய ஆட்சிமலரும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கொன்றுவிட்டே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவானது. ஆனால், எமது ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறு அல்ல. அக்கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்மாணம். அக்கட்சியின் குழந்தை. இது ஜனநாயக்கட்சி. குடும்ப ஆட்சியுள்ள கட்சி அல்ல. ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு வழங்கிய அனுமதியின் பிரகாரமே எமது பயணம் தொடர்கின்றது.

அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு பலமானதொரு அரசியல் கூட்டணி அவசியம். அதனையே நாம் உருவாக்கினோம். ஜனநாயகம், சமூகநீதி, இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஆகிய மூன்று காரணிகளை முதன்மைப்படுத்தியே ஐக்கிய தேசியக்கட்சி அன்று உருவாக்கப்பட்டது.

1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் எமது கட்சியால் அரச தலைவர் ஒருவரை பெறமுடியாமல்போனது. ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் எதிரணியில் இருந்ததில்லை.

ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் எம்மால் அரச தலைவர் ஒருவரை பெறமுடியவில்லை. ஏன் இப்படி நடந்தது? இதனால்தான் தலைமைத்துவ மாற்றத்தை மக்கள் கோரினார்கள். சஜித் தான் எங்களுக்கு வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

அதேபோல் நாட்டிலுள்ள புதிய தலைமுறையினருக்கு சம்பிரதாய அரசியல் மீது அதிருப்தி உள்ளது. அதனால்தான் சஜித் போன்ற புதிய தலைவர்களை விரும்புகின்றனர். எனவே, புதிய சந்ததியினர் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாம் வழங்குவோம்.

தமிழ் மக்கள் மத்தியில் கருணாவை வைத்து ஒரு கருத்தையும், தெற்கில் சரத் வீரசேகரவை வைத்து வேறொரு கருத்தையும் முன்வைக்கின்றனர். ஆனால், சஜித் அணி சந்தர்ப்பவாத அரசியல் நடத்தவில்லை. எனவே, இனவாத, சந்தர்ப்பாத அரசியல் நிறுத்தப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter