நுவரெலியா பொலிஸ் பிரிவில், தப்லீக் பணிகளில் ஈடுபட்டதாக கூறி 8 இந்தோனேஷியர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் சமூகத்துக்கு மத்தியில் பேசு பொருளாக உள்ளது. எனவே அந்த விடயத்தின் முழுமையான விபரங்களை விடிவெள்ளி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது.
உண்மையில் இலங்கையில் 1950களில் இருந்து தப்லீக் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. இந்த பணிகள் முஸ்லிம் அல்லது இஸ்லாமிய சமூகத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மர்கஸ்’ என்ற பெயரால் அறியப்படும் மத்திய நிலையத்தின் ஊடாக வலையமைப்பு உருவாக்கப்பட்டு இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மர்கஸ் மத்திய நிலையம் இலங்கையின் பாராளுமன்றில் 1999ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக கூட்டிணைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கட்டமைப்பு என்பதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.
இந்த தப்லீக் பணிகளுக்காக (பிரசாரம்) இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு முஸ்லிம்கள் செல்வதும், வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம்கள் இங்கு வருவதும் காலா காலமாக நடந்து வரும் ஒரு செயற்பாடாகும்.
இந்த நிலையிலேயே குறித்த பணிகள் தொடர்பில் வந்ததாக கூறப்படும் 8 இந்தோனேஷியர்களை பொலிஸார் கைது செய்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பீ 12408/24 எனும் இலக்கத்தின் கீழ் இந்த வழக்கு நுவரெலிய நீதிவான் நீதிமன்றில் முதல் தகவல் அறிக்கை ஊடாக (பி அறிக்கை) பதிவு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸ் அத்தியட்சர் பணிமனையின் உதவி பொலிஸ் அத்தியட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த ஊடாக இந்த அறிக்கை நுவரெலிய நீதிவான் பிரபுத்திகா நாணயக்காரவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த பீ அறிக்கை பிரகாரம், கடந்த 2024.12.02 ஆம் திகதி நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எச். டி.W .பி. A.டW.ஜி.R.பீ.H. W.A.பீ. ஹக்மன, வயல சுற்றுலா பிரிவூடாக ஒரு தகவலை எழுத்து மூலம் நுவரெலிய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரனதுங்கவுக்கு அனுப்பியுள்ளார். அந்த தகவல் குறித்தே உதவி பொலிஸ் அத்தியட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித் துள்ளனர்.
அதன்படி, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, நுவரெலியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எஸ்.பி. டி சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்.டி.டப்ளியூ.பி.ஏ.டப்ளியூ.ஜி.ஆர்.பீ.எச். டப்ளியூ.ஏ.பீ. ஹக்மனவின் அறிவுறுத்தலின் கீழ் இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் தரப்பில் கூறப்படும் தகவல்கள் பிரகாரம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த தலைமையிலான குழுவினர் குறித்த விடயம் மற்றும் இடம் தொடர்பில் முன்னெடுத்த தேடல்களின் பின்னர் சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது 8 வெளி நாட்டவர்கள் கொண்ட குழு நுவரெலியா அல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலில் தங்கி இருப்பதும் அவர்கள் 2024 நவம்பர் 29 ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் வலய அதிகார எல்லைக்குள் வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. முதலில் அவர்கள் ஹாவஎலிய மஸ்ஜித் ராசித் பள்ளிவாசலுக்கு வந்துள்ளதும் அங்கிருந்தே நுவரெலியா அல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வந்ததாகவும் உதவி பொலிஸ் அத்தி யட்சர் நிஷாந்த குழுவினர் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதன்படி இந்த 8 பேரும் இந்தோனேஷியர்கள் என பொலிஸார் கண்டறிந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த நிலையில் இவர்களுக்கு பொறுப்பாளராக நுவரெலியாவை சேர்ந்த மொஹம்மட் பளீல்தீன் என்பவர் இருந்ததாகவும், முதலில் அவரது வாக்கு மூலத்தை பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணதுங்க ஊடாக பதிவு செய்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இதன்போது இவருக்கு இந்தோனேஷிய பிரஜைகள் பயன்படுத்தும் மொழி தொடர்பில் பரந்த அறிவு காணப்படுவதாக தெரியவந்ததாக கூறும் பொலிஸார். அவரின் உதவியோடு 8 இந்தோனேஷிய பிரஜைகளின் வாக்கு மூலங்கள் பின்னர் பதிவு செய்யப்பட்ட தாக தெரிவித்தனர்.
இதன்போது முதலில் இலங்கையில் தங்கியிருக்க அவர்களிடம் செல்லுபடியான வீசா இருக்கின்றதா என பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணதுங்க வினவியதாகவும் இதன்போது எவரும் செல்லுபடியான வீசாவை பொலிஸாரிடம் சமர்ப்பிக்க தவறியதாகவும். இதனை தொடர்ந்து அவர்களது கடவுச் சீட்டுக்களை கோரிய போது அவற்றையும் முன் வைக்க அவர்கள் தவறியதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்ப்பித்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணதுங்க, இலங்கை தீவில் தங்கியிருக்க செல்லுபடியான வீசா மற்றும் சுடவுச் சீட்டு இல்லாமை தொடர்பில் குற் றச்சாட்டு விளங்கப்படுத்தப்பட்டு இந்த 8 இந்தோனேஷிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கடந்த டிசம்பர் 3 ஆம் திகதியிடப்பட்ட நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொலிஸாரின் அறிக்கை பிரகாரம் இந்த 8 பேரில் 58 வயதுடைய 4 பேரும். 57,65,61 மற்றும் 28 வயதுகளை உடையோரும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் கடந்த ஒக்டோபர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வந்துள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் 10 (அ) (ஆ) அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியமங்கள் மற்றும் கட்டளைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்தமை ஊடாக 1993ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கம் மற்றும் 1998 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்கம், 2006 ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க சட்டங்கள் ஊடாக திருத்தப்பட்ட 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 (1) (அ) அத்தியாயத்தின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை பிரகாரம். பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணதுங்க குழு முன்னெடுத்த விசாரணைகளில் தர்கா நகர், கிந்தோட்டை, நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் மூவரின் வாக்கு மூலங்கள் பதிவு செய் யப்பட்டதாகவும் அவற்றின் ஊடாக இந்த குழுவினர் இலங்கையின் பல பகுதிகளில் பிரசங்கங்களை முன்னெடுத்தமை தெரிய வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் சட்டப் பிரிவுகள் எவை ஊடாகவும் குற்றம் சுமத்தப்பட்டி ருக்கவில்லை. அத்தோடு இந்த குழுவினர் நாட்டுக்கு ஏதேனும் நிலையான காரணி ஒன்றினை மையப்படுத்தி வந்தார்களா அல்லது வேறு காரணிகளுக்காக வந்தார்களா என்பது குறித்து விசாரிப்பதாகவும், மேலதிக விசாரணைகளில் இவர்கள் மத போதனைகளில் ஈடுபட்டமை தெரியவந்ததாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவர்களது போதனைகள் ஏனைய மதங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததா என மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் நீதிவான் பிரபுத் திகா நாணயக்கார வழக்காவணத்தில் இட்டுள்ள பதிவுகளின் பிரகாரம், குடிவ ரவு குடியகல்வு சட்டத்தின் 45 (1) (அ) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள பின்னணியில் அச்சட்டத்தின் 47 (1) அத்தியாயம் பிரகாரம் பிணையளிக்க முடியாது எனவும் இவர்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டு விசாரணை நடப்பதாக பொலிஸார் கூறு வதால் பிணை கோரிக்கையை நிராகரிப்ப தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தான் நுவரெலியாவில் கைது செய்யப்பட்ட 8 இந்தோனேஷியர்கள் தொடர்பில் பொலிஸ் தரப்பு முன்னெ டுத்த விசாரணைகளின் முழுமையான பொலிஸ் தரப்பு நியாயங்களும், நீதிமன்ற உத்தரவுமாகும். இவை எந்தளவு தூரம் நியாயமானது அல்லது இவர்களை விளக்கமறியலில் வைக்க முன் வைக்கப்படும் குற்றச்சாட் டுக்களில் உண்மைத் தன்மை தொடர்பில் நாம் இங்கு ஆராய வேண்டி இருக்கின்றது. ஏனெனில் இது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் அல்லது பள்ளிவாசல் ஒன்றில் ஒன்றுகூடும் எவர் மீதும் சந்தே கத்தை தோற்றுவித்து முஸ்லிம் சமூ கத்தை மீண்டும் கவலைகளுக்குள் ஆழ்த் திவிடும் சம்பவமாக மாறிவிடக் கூடாது.
உண்மையில் இந்த 8 இந்தோனே ஷியர்களும் தப்லீக் பணிக்காக வந்த வர்கள். அவ்வாறு தப்லீக் பணிக்காக வந்தமையால் அவர்களை பொலிஸார் கைது செய்ததாக பதிவுகளில் இல்லை. பொலிஸார் நீதிமன்றில் முன் வைத்துள்ள பீ அறிக்கை பிரகாரம் பார்க்கும் போது அதில் இருக்கும் குற்றச்சாட்டு செல்லு படியான வீசா, கடவுச் சீட்டு இல்லை என்பதாகும்.
ஆனால் அக்குற்றச்சாட்டு தொடர்பில் முதல் சந்தர்ப்பத்திலேயே நீதிமன்றில் விடயங்கள் முன் வைக்கப்பட்டடுள்ளன. 2025 ஜனவரி 2 ஆம் திகதிவரை செல்லுபடியான வீசா மற்றும் கடவுச் சீட்டு அவர்களிடம் இருப்பதாக விடயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது என நீதி வானே தனது குறிப்பில் பதிவிட்டுள்ளார். உண்மையில் இலங்கையில் இதுவரை தப்லீக் பணிக்காக வருகை தரும் வெளி நாட்டவர்களாக இருக்கலாம் அல்லது இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அப்பணிக்காக செல்பவர்களாக இருக்கலாம். அனைவரும் சுற்றுலா வீசாவையே பயன்படுத்தி வருகின்றனர். அரசு மற்றும் பாது காப்பு தரப்புக்கு அனைத்து விடயங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரேயே வெளி நாட்டவர்கள் தப்லீக் பணிக்காக இலங் கைக்கு வருகின்றனர். இந்த நடவடிக் கைகள் சட்ட ரீதியில் எழுத்துரு வடிவில் இல்லாவிட்டாலும், இணக்கப்பாடுகளின் அடிப்படையில் காலாகாலமாக நடந்து வரும் செயற்பாடாகும். முஸ்லிம்கள் மட் டுமன்றி ஏனைய மதங்களை சார்ந்தவர்களும் அவர்களது மத அனுஷ்டானங்கள் தொடர்பிலான பயணங்களை சுற்றுலா வீசாக்கள் மூலமே முன்னெடுக்கின்றனர். இதற்கு முன்னர் 1976 ஆம் ஆண்டு வெளிநாட்டவர்கள் இவ்வாறு தப்லீக் பணிக்காக வருவதை தடுக்கும் நடவ டிக்கைகள் பதிவாகியுள்ளன. அப்போது முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவுடன் கலந்துரையாடி விஷேட ஏற்பாடுகளை செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சுற்றுலா வீசாவில் தப்லீக் பணிக்காக வெளிநாட் டவர்கள் வந்து சென்றுள்ளனர். அதன்படி 1996 இல் புத்தளத்தில் நடாத்தப்பட்ட தப்லீக இஜ்திமா வரலாற்றில் முக்கியமா னது. இப்போது இலங்கையர்கள் உலகின் சுமார் 100 நாடுகளுக்கு தப்லீக் பணிக ளுக்காக சென்று வருகின்றனர்.
இதுவரையில் தப்லீக் பணிக்காக நாட் டுக்கு வரும் எவரும் நாட்டு சட்டத்தை மீறியதாகவோ, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியதாகவோ பதிவுகளை காண முடியவில்லை. வெளிநாட்டிலிருந்து வருவோர் இங்கு தப்லீக் பணிகளை முன்னெடுக்கும் போது அவர்களுக்கு சில வழிகாட்டலகள் உள்ளன. அவர்கள் முஸ்லிம் சமூகத்தினகுடன் மட்டுமே இங்கு கருத்து பரிமாற் றல்களை முன்னெடுப்பதும் அவர்கள் பிரசாரங்களை செய்வதில் இருந்து தவிர்ந்து பெரும்பாலும், உள்ளூர்வாசிக ளுடன் சேர்ந்து மக்களை பள்ளியின் பால் அழைக்கும் நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுப்பதாக பதிவுகள் உள்ளன. அத்துடன் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் தப்லீக் பணிகளுக்காக வருவது, அவர்கள் சார் மார்க்க விடயங்களில் அறிவினை விருத்தி செய்துகொள்வதை அடிப்படையாக கொண்டதாகவே அமைந்திருக்கும் என கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில், பொலிஸாரின் நடவடிக்கைகள் அல்லது தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் சந்தேகங் களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இலங்கையில் சுற்றுலா வீசாவில் வருவோர் மத பிரசாரங்களில் ஈடுபட முடியாது.
அவ்வாறு மத பிரசாரங்களில் ஈடுபடுவதானால், மத நடவடிக்கைகள் தொடர்பில் தனியாக வீசா பெற வேண்டும். ஆனால் இங்குள்ள நிலைமை வேறு. சுற்றுலா வீசாவில் வருவோர். மத நட வடிக்கை வீசாவில் வருவோர் முன்னெடுக்க முடியுமான செயலமர்வுகள், பிரசார கூட்டங்கள் போன்றவற்றை செய்ய முடியாது. எனினும் அவர்களுக்கு மக்களை சந்திப்பது, பள்ளிவாசல்களுக்கு செல்வது, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளுக்கு எந்த தடையும் இல்லை என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இங்கு ஒரு முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். அதாவது நுவரெலிய பொலிஸார் கைது செய்த 8 இந்தோனேஷியர்கள் தொடர்பிலும், அவர்களது பெயர், சுடவுச் சீட்டு இலக்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி 2024 ஒக்டோபர் 22 ஆம் திகதியே மர்கஸ் இஸ்லாமிய நிலையம் ஊடாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் ஊடாக அனைத்து விடயங்களும் முன் வைக்கப்பட்டே வீசா பெறப்பட்டடுள்ளது. அந்த கடிதத்தில் மிகத் தெளிவாக இவர்கள் ‘சன் மார்க்க சுற்றுலா’ தொடர்பிலேயே வருவ தாக குறிப்பிட்டு அதற்காகவே வீசாவும் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியொன்று காணப்படும் நிலையில்தான் கடந்த திங்களன்று. இந்த விவகார வழக்கு நுவரெலியா நீதிவான் பிரபுத்திகா நாணயக் கார முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது. சட்டத்தரணி ஷஹ்மி பரீட் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய கடந்த திங்களன்று (9) சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணி களான வஸீமுல் அக்ரம், ஷஹ்மி பரீட் சிந்தக்க மகநாராச்சி, சந்தீப கம எத்தி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
அதன்படி சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இந்த விவகாரத்தில் முன் வைத்த வாதங்கள் முக்கியமானவை. அவரது வாதங்கள் சட்ட ரீதியிலான விடயங்களை அலசுவதாக அமைந்திருந்தது. அதன்படி குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம், பொலிஸார் கூறுவதைப் போல இந்தோ னேஷியர்களை கைது செய்ய பயன்படுத்தப்பட்டுள்ள அத்தியாயம் தொடர்பில் மிக விரிவாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் விடயங்களை முன் வைத்து, அவர்களுக்கு எதிராக வழக்கொன்றினை கொண்டு செல்ல முடியாது எனும் வாதத்தை முன் வைத்தார்.
‘இந்த சந்தேக நபர்கள் அனைவரும் இந்தோனேஷியர்கள். உலகளவில் ஆன் மீக சுற்றுலா எனும் ஒரு கட்டமைப்பு உள்ளது. அதன்படியே இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் எந்த வீசா விதி மீறல்களையும் செய்யவில்லை. நுவரெலியாவுக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். நுவரெலியாவுக்கு அவர்கள் வருகை தந்தமைக்கும் காரணம் உள்ளது. 1974 ஆம் ஆண்டில் 182 ஹஜ் பயணிகள் உள் விட்ட 191 பேர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தனர். மக்கா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இந்தோனேஷியர்களை தாங்கிய விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். நுவரெலியாவுக்கு மிக அண்மித்த பகுதியில் இந்த இடம் அமைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி அதன் 50 வருட பூர்த்தி தினமாக இருந்த நிலையிலேயே அதனை மையப்படுத்தி இந்த இந்தோனேஷியர்கள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களோடு மிக நெருக்கமான வலையமைப்பொன்று இருக்கும் பின்னணியிலேயே, கொழும்பில் உள்ள ‘மர்கஸ்’ ஊடாக அவர்கள் நுவரெலியாவுக்கு வந்து அங்குள்ள பள்ளிவாசல் ஊடாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இது சட்ட விரோதமானது அல்ல. இவர்கள் இலங்கையின் சட்ட ரீதியிலான விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் உரிய முறையில் வந்தவர்கள். அவர்களின் கடவுச் சீட்டுக்கள், வீசா என்பன உள்ளன. எனவே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 10 ஆம் அத்தியாயம் பிரகாரம் குற்றம் ஒன்று வெளிப்படவில்லை. எனினும் பொலிஸார் இவர்களை குடிவ ரவு குடியகல்வு சட்டத்தின் 45 (1) (அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்ததாக கூறி நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.
உண்மையில் குடிவரவு குடிய கல்வு சட்டத்தின் 45 (1) (அ) பிரிவின் கீழ் ஒருவரை கைது செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது அதே சட்டத்தின் 48 ஆவது அத்தியாயத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, அவ்வாறு கைது செய்யப்படுவோருக்கு அவர்களது நிரபராதித் தன்மையை உறுதிப்படுத்த 14 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படல் வேண்டும். அதாவது குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரிடம் இருந்து ஏதும் விஷேட ஆலோசனைகள் இல்லாத போது. குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருடன் கதைத்து 14 நாட்கள் அவர்களை தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவே மிரிஹானையில் உள்ள தடுப்பு முகாம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த 14 நாட்களில் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமது நிரபராதித் தன்மையை நிரூபிக்காவிட்டால் அதன் பின்னர் நீதி மன்றில் ஆஜர் செய்ய முடியும். உண்மையில் குடிவரவு குடியகலவு சட்டத்தின் 45 (1) (அ) பிரிவின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் சந்தேக நபர் ஒருவருக்கு பிணையளிப்பது தொடர்பில் இதே சட்டத்தில் விதிவிதனங்கள் உள்ளன. குடிவரவு குடியகல்வு சட்டத்துக்கு 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் பிரகாரம் பிணை வழங்கும் அதிகாரம் நீதிவானுக்கு உள்ளது.
இவ்வாறான பின்னணியில் இந்த 8 இந்தோனேஷியர்கள் குறித்தான விடயம் தற்போது இராஜ தந்திர மட்டத்தில் பேசு பொருளாகியுள்ளது. அதே நேரம் பொலிஸ் ஆணைக் குழு இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது. உளவுத்துறைகள் ஆராய்ந்துள்ளன. எனக்குள்ள தகவல்கள் படி அத்தனை பேரினதும் ஆராய்வுகளின் பின்னர் இந்த சந்தேக நபர்களை விடுவிப் பதில் எவருக்கும் ஆட்சேபனம் இல்லை என்றே எனக்கு அறியக் கூடியதாக உள்ளது. எனவே இவர்களை விடுவிக்க உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோருகின்றேன். சில நேரம் அவர்களை விடுவிப்பது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பிக்க விரும்பவில்லை எனில், பொருத்தமான பிணை நிபந்தனைகளுடன் அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோருகின்றேன்.’ என சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதிட்டார்.
இந்த நிலையில் இது குறித்து தீர்மானத்தை அறிவித்த நீதிவான் பிரபுத்திகா நாணயக்கார, பொலிஸார் இந்த 8 இந்தோனேஷியர்கள் தொடர்பிலும் எழுத்து மூல ஆவணம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளதாகவும். அதில் சுற்றுலா வீசாவில் வந்து மத பிரசாரம் மற்றும் பிரசங்கங்களில் ஈடுபட முடியது எனவும் அது தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனால் சந்தேக நபர்களை விடுவிக்க முடியாது எனவும், தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அவர்கள் புரிந்துள்ளதாக நீதிமன்றிடம் விடயங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். சந்தேக நபர்கள் இலங்கையர்கள் அல்லர் மற்றும் அவர்களுக்கு நிரந்தர வதிவிடம் நாட்டில் இல்லாமை போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு அவர்களை வழக்கு நடவடிக்கைகளுக்கு அழைத்துக்கொள்வதில் உள்ள சிரமத்தை கையப்படுத்தி பிணையை மறுத்ததாக குறிப்பிட்ட நீதிவான். விளக்கமறியல் உத்தரவினை மாற்றப் போவதில்லை எனவும் இவர்களுக்கு எதிராக விசாரணையை நிறைவு செய்து குற்றப் பத்திரிகையை அடுத்த தவணை திகதியில் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும். அதன் பின்னர் வழக்கை நிறைவு செய்துகொள்ள சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
எப்.அய்னா
(விடிவெள்ளி 12-12-2024)