அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் காண முடிகிறது. இம்முறை எற்பட்ட வெள்ளத்தின் அளவும் பாதிப்புகளில் அளவும் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் பொழுது மிக பாரதூரமானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசாங்க தகவல்களின் படி 2022 இன் 2வது பாதியில் எற்பட்ட வெள்ளங்களின் நீர்மட்டம் 9.5 அடி உயரத்தை தொட்டதோடு 980 மில்லியன் ரூபாய் பொருள் நஷ்டத்தையும் எற்படுத்தி இருந்தது. இம்முறை நீர்மட்டமும் அதிகரித்து பொருள் நஷ்டமும் அதிகரித்தே இருக்கும். அதேவேளை நேரடியாக இல்லாவிட்டாலும் ஒரு உயிர் இழப்பையும் சந்தித்து விட்டோம்.

https://disaster.lk/pinga-oya-floods/

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்பொழுது கிடைக்கும் என்பது நான் உட்பட ஒவ்வொரு அக்குறணை குடிமகனினதும் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாக இருக்கிறது. அதேவேளை, இப்பிரச்சினை தொடர வேண்டுமென எதிர் பார்க்கும் சிலரும் (அரசியல் வாதிகள்), இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தனக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதில் இன்னும் சிலரும் இருப்பது கவலைக்கிடமான உண்மையே.
இதன் விளைவாக, பொதுமக்கள் பலரும் சற்று நிதானமிழந்து கொந்தளித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. சொத்துக்களை இழந்த வியாபாரியினது அல்லது அவரது உறவினர் நண்பரின் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது இந்தக் கொந்தளிப்பு நியாயமாகவே தெரிகிறது. மறுபக்கம், ஆர்ப்பாண்டங்களும் கவன ஈர்ப்பு போராட்டங்களும் நேரடியாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடகவும் ஆங்காங்கே காணக் கிடைத்தது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊர் மக்களை திசை திரும்ப செய்து இதிலும் அரசியல் இலாபம் பார்க்க காத்திருக்கும் நரிகளும் இல்லாமல் இல்லை.

அது மட்டுமல்லாது, வெள்ளம் வடிந்தவுடன் எஞ்சிய சேற்றையும் அதே ஆற்றில் தள்ளி விட்டு மீண்டும் அன்றாட விடயங்களை தொடர்வது எமது வழமை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இம்முறை வெள்ளத்தின் தாக்கம் எமது நகரத்தின் வியாபார எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கும் நிலையில், இதற்கான நிரந்தர தீர்வை உரிய முறையில் அடைவது நம் ஒவ்வொருவரிநதும் சமூக கடமையாக (பர்ளு கிபாயா) இருக்கும் என நான் கருதுகிறேன்.
உள்ளூரில் வசிக்காமல், வியாபாரம் எதுவும் செய்யாமல், வெள்ளம் அல்லது நீர் வடிகால் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் வெறுமனே ஒரு பாமர அக்குறணை குடி மகனாய் நான் இதை எழுதுகிறேன். எமது ஊரில் வெள்ளம் ஏற்பட காரணமாக கருதப்படும் முக்கிய பிரச்சினைகளையும் அதற்கான என்னால் முடிந்த சில ஆய்வுகளையும் இங்கே பதிவிடுகிறேன். என் போன்ற பாமரனுக்கே இவ்வாறு சிந்திக்க முடியுமெனில் இது குறித்த துறை சார் வல்லுநர்கள் ஒன்றிணைந்தால் இப்பிரச்சினையை வெகு விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம் என்பது எனது நம்பிக்கை.

1. சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு

சுத்தம், சுகாதாரம், பொது சொத்துக்கள் மற்றும் சூழலை பாதுகாத்தல் போன்ற உயரிய குணங்களை எமது மார்க்கமாக கொண்ட நாம் எங்கே வழி தவறினோம் என்பது பெரும் கேள்விக் குறியாகவே உள்ளது. இதில் நம் அத்தியவசிய தேவையான தண்ணீரை நான் உட்பட நம்மில் பலரும் நம் பிள்ளைகளும் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை சுய பரிசீலனை செய்ய கடமைப் பட்டுள்ளோம். இது தண்ணீரை சேமித்தல், வீண் விரயத்தை குறைத்தல், டெங்கு போன்ற நோய்களை துறக்க நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் தொடங்கி நமது சொத்தாக மதிக்கப்பட வேண்டிய நம்மூர் ஆறுகளையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை ஆகும்.

இது இவ்வாறு இருக்க, அண்மையில் எற்பட்ட வெள்ளத்தின் பிறகு நான் செவியுற்ற, பார்த்த அல்லது கடந்து வந்த சில சம்பவங்கள் இவை. தாய்ப்பள்ளி பாதை பாலத்தை கடக்க முடியாத அளவு வெள்ள நீர் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், அதனை அண்மித்த சிலர் குப்பைகளை மூட்டை மூட்டையாக ஆற்றில் கொட்டுகின்றனர். 8ஆம் கட்டை என்று நினைக்கிறேன், டிப்பர் வாகனம் ஒன்றின் மூலம் மண் கொட்டும் வீடியோ ஒன்றை பார்த்தேன். ஆற்றை அண்மித்த பல இடங்களில் ட்ரைனேஜ்கள் திறந்து விடப்படுவது பலரும் அறிந்ததே. இவை அனைத்தையும் தாண்டி, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் கடை முதலாளிகளே கடையை கூட்டி குப்பைகளை ஆற்றில் எறியும் அவலம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறான சம்பவங்களை அடிக்கிக் கொண்டே போகலாம்.

இவை அனைத்தும் நமது சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் மாத்திரமே திருத்த முடியும். எந்த மாற்றமும் எழுச்சியும் தன்னிலிருந்தே ஆரம்பமாகிறது என்பது எனது அபிப்பிராயம். வெறுமனே மற்றவர்களையும் அரசாங்கத்தையம் குற்றம் சுமத்துவதை தவிர்த்து என்னால் என்ன பங்களிப்பு வழங்க முடியும் என்பதனை முதலில் நாம் அறிந்திருக்க வேண்டும். குறைந்தது இன்றிலிருந்து எமது ஆற்றில் மழை நீர் தவிர வேறு எதையும் கலக்கவும் மாட்டோம், வேறு எவருக்கும் அதை அனுமதிக்கவும் மாட்டோம் என நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள் வேண்டும்.

2. ஊர் தலைமை மற்றும் ஒற்றுமை

அடுத்த கட்டமாக, எமது ஊரில் நான் பார்க்கும் மிக கவலைக்கிடமான விடயம் ஒற்றுமையின்மை. நம்மில் சிலர் சிலரோடு ஒற்றுமையாக இருந்தாலும், பல நேரங்களில் பலரும் பிரிவு பட்டு பல்வேறுபட்ட முரண்பாடுகளுடன் இருப்பது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. இம்முரண்பாடுகள் பெரும்பாலும் மார்க்க இயக்கம் சார்ந்தனவாகவும் (தப்லீக், தவ்ஹீத், தரிக்கா, etc), அரசியல் கட்சிகளாகவுமே பெருவாரியாய் காணக் கிடைக்கிறது.

வெவ்வேறு கருத்து வேறுபாடுகள் சமூகத்தில் இருப்பது கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடும் வரவேற்பிற்கும் உரியதுதான். ஆனால் இவ்வேறுபாடுகள் இயக்க வெறியாகவும் கட்சி வெறியாகவும் மாறுவது நம் ஊர் போன்ற ஒரு முதிர்ந்த சமூகத்திற்கு உரிய பண்பல்ல. வெள்ளப் பிரச்சினை போன்ற பொதுத் தேவைகளின் போது இயக்கங்களையும் கட்சிகளையும் துறந்து ஒரே படகில் பயணிப்பதே நாம் அனைவரும் எதிர்பார்க்கும் நிரந்தர தீர்வை பெற்றுத் தரும்.

இவ்வாறான ஒரு கூட்டு முயற்சியில் ஊரின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து புதியதொரு அமைப்பை உருவாக்குவதே பொருத்தமாக இருக்க முடியும். இதில் நம் ஊர் சார்ந்த ஜம்மியத்துல் உலமா, பள்ளி நிருவாகிகள், பஸார் கமிட்டி, வியாபாரிகள், கட்டிட உரிமையாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட அறிஞர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், அரச ஊழியர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்புகளும் பங்கேற்றல் வேண்டும். இதில் எந்த மார்க்க இயக்கங்களையோ அரசியல் கட்சிகளையோ உயர்த்திப் பிடிக்க அவசியம் இருக்காது. அது மட்டுமல்லாது இந்த அமைப்பின் தலைமைத்துவத்தை உரிய துறை சார் வல்லுநர்களிடம் ஒப்படைத்து மற்றவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் பெரும் சவால்களையும் வெற்றி கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.

இவ்வமைப்பை தொடங்குவதற்கு வெள்ளத்தோடு அதிக நெருக்கமுள்ள வியாபாரிகளும் பஸார் கமிட்டியும் அஸ்னா பள்ளியுடன் ஒன்றிணைந்து உரிய ஆரம்பத்தை வழங்கலாம் என நினைக்கிறேன்.

3. பொல்கொள்ள அணை

அக்குறணை வெள்ளப் பிரச்சினைக்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுபவைகளில் பொல்கொள்ள அணையும் ஒன்று. இவ்வணை 1976ல் கட்டி முடிக்கப்பட்டு உக்குவல நீர் மின்நிலையத்திற்கு சுரங்க கால்வாய் மூலம் நீர் விநியோகம் செய்கிறது.

ஊரில் பலரும் இவ்வணையை குற்றம் சுமத்தினாலும், ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இக்கருத்து பிழையானது என்பது தெரிய வருகிறது. என்னால் முடிந்த ஒரு சிறிய தேடலின் மூலம் கீழ்வரும் தரவுகளை காணக் கூடியதாக இருந்தது.

(a) 2001ம் ஆண்டுக்கு பிறகே வெள்ளம் ஏற்படுவது பெரிதும் அதிகரித்துள்ளது.
(b) 2001ம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் மழைவீழ்ச்சி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
(c) அக்குரணையின் நீர் மட்டம் அணையின் நீர் மட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திலேயே காணப்படுகிறது.
http://www.climate.lk/…/Analysis_of_Historical… by Dr.Lareef Zubair
https://www.linkedin.com/in/lareef-zubair-3751613a/
இவ்வாய்வுகளின் அடிப்படையில் வெள்ளம் ஏற்படுவதற்கு உந்துகோலாக 2001ன் பின் ஏற்பட்ட ஏதோ ஒன்று இருப்பதும் இவ்வணைக்கும் வெள்ளத்திற்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகிறது.

4 . ஆற்றோர கட்டிடங்கள்

இவ்வெள்ளப் பிரச்சினைக்கு காரணமாக பலராலும் குற்றம் சுமத்தப்படுவது அற்றோரக் கட்டிடங்களுக்கே . மேற்படி ஆய்வுகளும் அதையே எதிர்வுகூறுகின்றது. எனது கண்ணோட்டத்தில் ஆற்றை அண்டிய சட்ட விரோத கட்டிடங்களை மாத்திரம் அகற்றினாலே தற்போது வரக்கூடிய வெள்ளத்தில் பாதியளவு குறைந்து விடும். எது சட்ட விரோத கட்டிடம் என்பதனை அக்குறணை பிரதேச சபை அல்லது அரசு கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
கட்டிடங்களுக்கு மேலதிகமாக ஆற்றோரங்களில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பு மதில்கள் தண்ணீர் கொள்ளளவை பெரிதும் குறைக்கிறது. கடும் மழை நேரங்களில் ஆற்றுக்கு வரும் நீரின் கொள்ளளவை சமாளிப்பதற்கு, அந்த நீர் விரிந்து பரவ வேண்டியுள்ளது. இதற்கு அவசியமான பெரும் நிலப்பரப்பு இம்மதிலகள் மூலம் தடைப்படுகிறது. இதனை ஆற்றுப்படுகை (riverbed) என்றும் அறிஞர்கள் அழைக்கின்றனர். எனவே கட்டிடங்களோ, மதில்களோ ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் நீர்க் கொள்ளளவை சமாளிக்கும் அளவுக்கு உடைக்கப்பட வேண்டும்.

2000ம் ஆண்டு காலங்களில் பாதையை அகலப்படுத்த பிரம்மாண்ட மதில்கள் அமைக்கப்பட்டது பலரும் அறிந்ததே. எனவே இவ்வெள்ளத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் பங்கு உண்டு.
இவ்விடயத்தில் பெரும் சவாலாக இருக்கப் போவது கட்டிட உரிமையாளர்களைத் திருப்திப் படுத்துவது மாத்திரமே. இது தனிப்பட்ட முறையில் என்னாலோ உங்களாலோ செய்து முடிக்கக்கூடிய எளிய விடயம் அல்ல. ஆனால் ஊராக ஒன்று சேர்ந்து முறையான தலைமைத்துவதின் உதவியுடன் இதை அணுகினால், நிச்சயம் இது சாத்தியமே.

மறுபுறம், கட்டிட உரிமையாளர்களின் முதலீடு மற்றும் காணிப் பெறுமதி தொடர்பாகவும் மேற்படி தலைமையின் உதவியுடன் அரசாங்க மானியமோ, அல்லது மாற்றீடாக வேறு காணி அல்லது கட்டிடங்களை ஒழுங்கு செய்யவோ முடியும்.

5 . அளவுக்கு அதிகமான பாலங்கள்

ஆற்றை அண்டிய கட்டிடங்கள் பாதையின் மறுமுனையில் கட்டப்படும் போது ஒவ்வொரு கடைக்கும் அல்லது கட்டிடத்துக்கும் தனித் தனி பாலங்கள் அவசியமாகிறது. இது போன்ற குறுகிய பாலங்களின் மதில்கள் மேலே குறிப்பிட்ட ஆற்றுப்படுகையின் பரப்பளவை மேலும் குறைக்கிறது.

அண்மை காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் நீர் மட்டத்தில் இருந்து உயர்ந்து இருப்பதை அவதானித்து இருப்பீர்கள். பாலத்தின் உயரம் நீரோட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதனால் வெள்ளப் பிரச்சினைக்கு இது ஒரு போதும் தீர்வாகாது. இவ்வாறான பாலங்களை கட்டுவதற்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

கட்டிடங்களை ஆற்றிலிருந்து தூரமாக்கி பாலங்களை முடிந்த வரை நீளமாக அமைப்பதே சிறந்த முறையாக இருக்க முடியும். இம்முறை மூலம் சில பாலங்களே முழு அக்குறணை நகருக்கும் போதுமானதாக இருக்கும். ஆற்றின் மறு பக்கதில் அனைத்து கட்டிடங்களையும் இணைக்கும் பாதை (service road) ஒன்றை அமைப்பது பாலங்களை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். இன்னும் ஒரு படி மேலே சென்று ஆற்றின் இரண்டு பக்கங்களையும் ஒற்றை வழி பாதையாக (one way) மாற்றுவதையும் பரிசீலனை செய்யலாம்.

6. ஆற்றின் ஆழம்

நம்மில் பலர் ஊரில் இருக்கும் வயோதிபர்களிடம் இந்த ஆற்றை பற்றிய பல கதைகள் கேட்டிருப்போம். எனது தந்தை அறிய குடுகல முதல் ஏழாம் கட்டை வரை பல கற் குழிகளும் சில அமணங்களும் இருந்ததாம். துணுவில சந்தி பாலத்திற்கு கீழே யானை குளிப்பாட்டுவதை பலரும் கண்டிருக்கிறார்கள். அதே ஆறுதான் இப்பொழுது வெறும் மூன்றே அடி அல்லது அதற்கும் குறைவான ஆழத்தில் இருக்கிறது.

ஆற்றின் ஆழம் குறைவதற்கு பிரதானமான காரணம் நீரோட்டத்தின் வேகமே. மேலே குறிப்பிட்டது போன்று, கட்டிடங்கள், மதில்கள் மற்றும் பாலங்களை அகற்றி நீர் வடிந்தோட வழி அமைத்தாலே சேர்ந்திருக்கும் சேறும் மணலும் கரைந்து சென்று விடும். இரண்டாவது முக்கிய காரணம் ஆற்றில் கொட்டப்படும் மண்ணும் ஏனைய கழிவு பொருட்களும். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இவற்றுக்கு மேலதிகமாக இயந்திரங்கள் மூலமாகவோ மணல் வியாபாரிகள் மூலமாகவோ சேர்ந்திருக்கும் மண் மற்றும் மணலை அகற்ற முடியும். நீரோட்டத்திற்கு வழி விடாமல் எவ்வளவு ஆற்றை தோண்டினாலும் ஒரு பயனும் இருக்காது என்பது உறுதி.

ஐந்துபைசாவுக்கு பிரயோசனமில்லா ஹலீம் MP.. அக்குறணையின் சாபம்

நீர் வடிந்தோடாமல் இருப்பதற்கு பொல்கொள்ள அணை ஒரு காரணமாக இருக்கலாம் என்பது இன்னுமொரு ஐயப்பாடு. அம்பதென்னை ஆற்றை Arpico விற்கு முன் பகுதியில் பார்த்தாலே நீர் நின்ற வண்ணம் இருப்பது வெற்றுக் கண்ணுக்கு தெரிகிறது. அது மட்டுமல்லாமல் அணையின் சேறு அகற்றப்படாமல் இருப்பதும் இங்கு குறிப்பிட தக்கது. இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் செய்ய வேண்டியது அவசியம்.

7. மழை நீரின் அளவு

ஏற்கனவே சுட்டிக்காட்டிய ஆய்வுகளின் அடிப்படையில் அன்று தொட்டு இன்று வரை மழை விகிதத்தில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. ஆனால் ஆற்றை சென்றடையும் நீரின் அளவில் பாரிய மாற்றம் ஏட்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.
இதற்கு பிரதானமான காரணம் காடழிப்பு மற்றும் அதிக படியான கட்டிடங்களுமே. காடுகளில் மழை பெய்யும் பொழுது, ஒவ்வொரு துளியும் இலை குழைகளுடன் சேர்ந்து சொட்டுச் சொட்டாக நிலத்தை வந்தடைவதால், அந்நீரை நிலம் உறிஞ்சிக்கொள்கிறது. மாற்றமாக கட்டிடங்களின் கூரை மொத்த நீரையும் ஒரே முறையில் பாய்ச்சுவதனால் அந்நீர் நிலத்தில் உறிஞ்சப்படாமலே வடிந்தோடுகிறது. இது மண் சரிவு மற்றும் நிலக்கீழ் நீர் குறைதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைவதோடு எமது ஊரில் வெள்ளம் ஏட்படுவதற்கு இன்னுமொரு காரணமாக இருக்கிறது.

இதற்கு தீர்வாக மரநடுகையே பெரிதும் உதவியளிக்கும். எனினும் நம் ஊரில் நிலவும் நில பற்றாக்குறை காரணத்தால், மாற்று வழிகளை யோசிக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக, கூரை மூலம் வரும் மழை நீரை சேமித்து மாற்று தேவைகளுக்கு பயன்படுத்தலாம். முடிந்த வரை இருக்கும் சிறிய நிலங்களிலும் ஏதாவது செடி கொடிகளை வளர்க்கலாம்.

8. ஆற்றில் மண் மற்றும் குப்பைகளை கொட்டுதல்

மேலே சுட்டிக்காட்டிய சில சம்பவங்களை போன்று நம் எதிரில் சில சம்பவங்கள் நடந்தாலும் நமக்குத் தெரியாமல் பல குப்பைகளும் வீடு கட்ட இடிக்கப்படும் மண்ணும் ஆற்றில் கொட்டப்படுவது ஒரு கசப்பான உண்மையே. இதற்கும் மேலதிகமாக, பல கட்டிடங்களது ட்ரைனேஜ் கழிவுகள் உட்பட ஆற்றை வந்தடைவது மிக அருவருப்பானது.

இதற்கு சுய ஒழுக்கத்தை தவிர வேறு எதுவும் தீர்வாக தெரியவில்லை. மேலதிகமாக CCTV போன்ற நவீன தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி ஆற்றை கண்காணிக்க சற்று முயற்சி எடுக்கலாம். எற்கனவே கடை செய்பவர்கள் மேலதிகமாக ஒரு கேமராவை ஆற்றின் பக்கம் திருப்பி வைத்தலே பலர் பயப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதுமட்டுமன்றி இவ்வாறு பிடிபடுபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

சுத்தம் மற்றுள் சுற்றாடல் பற்றிய அறிவையும் உணர்வையும் சிறு பராயத்தில் இருந்தே பாடசாலை மற்றும் மத்ரசாக்கள் மூலமாக வழங்குவதன் மூலம் அடுத்த தலைமுறைக்காவது இவ்வாறான சொத்துக்களின் பெருமதி உணர்த்தப்பட வேண்டும்.

9. அரசியல் பக்கபலம்

நான் அடிக்கடி கூறும் ஒரு விடயம் “நாமே வியாபாரிகள், நம்மை வைத்தே அரசியல் வியாபாரம் செய்கிறார்கள்”. தேர்தல் காலம் வந்தால் நாம் பார்த்து கேட்டு பழகிய அதே விடயம் நடந்தே தீரும். சாணக்கியரும் ஊருக்காக பாராலுமன்றத்தில் ஒருவரும் வருவது பழகிப்போனதுதான்.

இதுவரை அக்குறணை அரசியலில் நான் இரண்டு வகையான அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறேன். முதல் வகை “அக்குரணையானுக்கு ஒண்டுமே செய்யாட்டியும் எங்குளுக்கு தான் ஓட்டு போடுவான்”. அடுத்த வகை “அக்குரணையானுக்கு என்னதான் செஞ்சாலும் எங்களுக்கு ஓட்டு போட மாட்டான்.” இரு பக்கதில் இருந்தும் நமக்கு ஏமாற்றம் மட்டுமே. இதனை இக்கால இளைஞர்களான நம்மால் மாற்ற முடியும்.

அண்மைக் காலங்களில் சில புதிய நகர்வுகளாக சுயேட்சை வேட்பாளர்களும், மேலே குறிப்பிடாத மூன்றாவது கட்சியும் சற்று பிரபலமாகி இருப்பது சிறியதொரு ஆறுதலாக இருந்தாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை இன்னும் பயன்படுத்தவில்லை என்பதே எனது நிலைப்பாடு.

இவ்வாறு இருக்கும் பொழுது அரசியல் பக்க பலத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமே. ஆனாலும் மேலே குறிப்பிட்டது போன்ற ஒரே அமைப்பின் கீழ் ஊர் தலைமைகளை ஒன்றிணைத்தால், அரசியல்வாதிகள் நம் பின்னால் அலைவார்கள்.

அரசியல்வாதிகள் தவிர்த்து மற்ற அனைத்து அரச அலுவலகங்கள் (பிரதேச சபை, பிரதேச செயலகம், அனர்த்த முகாமைத்துவ மையம், சுகாதார அமைச்சு, மற்றும் பல) மூலமாகவும் நமக்கு தேவையான உதவிகளை நாட முடியும் என நினைக்கிறேன். அத்தோடு அக்குறணையை பிரதேச சபையில் இருந்து நகர சபையாக மாற்றுவதற்கான உந்துதல்களையும் சில சமயம் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதனையும் முறையாக அணுகி அநுகூலப் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு முன்னேறுவது சிறந்தது.

10 . தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் முன்னேற்றம்

இங்கு நான் கூறியிருக்கும் விடயங்கள் உட்பட இப்பிரச்சினையை தீர்ப்பத்கான மற்ற அனைத்து முயற்சிகளையும் வெள்ளம் வந்தவுடன் மாத்திரம் தூக்கிப் பிடிக்காது முறையான ஒரு திட்டத்துடன் செயல்படுவதுவே நிரந்தரமான தீர்வை தரும். வெறுமனே கட்டிடங்களை உடைப்பதோ, ஆற்றை தோண்டுவதோ தீர்வுகளை தராது என்பதோடு பல பக்க விளைவுகளுக்கும் ஏதுவாக அமையும்.

இன்றைய சூழலில் நிரந்தர தீர்வுக்கான முயற்சிகளை உடனடியாக அடைவது சாத்தியமானதல்ல. எனவே வெள்ளத்தின் பாதிப்புகளை குறைப்பதற்கான முதட்கட்ட நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கலாம். உதாரணமாக:
(a) அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் மூலம் கணிக்கப்படும் திகதிகளை பஸாரில் அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

(b) முடியுமான அளவு தற்காலிக வெள்ள தடுப்புகளை கைடைகளுக்குள் வைத்திருதல்

கூடவே நிரந்தர தீர்வுக்கான முயற்சிகளையும் ஆரம்பித்து அந்நடவடிக்கைகளை முறையாக கண்காணிப்பதும் அவசியமானதாகும். இத்திட்டங்களின் முன்னேற்றம் பற்றி ஊர் மக்களை தெளிவு படுத்துவதும் மிக அவசியமானது. உதாரணமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஜும்மா தொழுகையை தொடர்ந்து இத்தகவல்களை மக்களுக்கு அறிவிக்கலாம்.

கடைசியாக, இக்கருத்துக்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட எண்ணங்கள் என்பதனால் இதில் பிழையான கண்ணோட்டங்களும் இருக்கலாம். அதே வேளை இது யாருக்காவது உபயோகமாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் தயவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஜஸாக்கல்லாஹு ஹைரன்
இவ்வண்ணம் – Nizwan Hamza -Link-

Check Also

அக்குறணை வெள்ளத்திற்கு தீர்வு காண்பதற்கு சட்டவிரோத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை

மாவட்ட செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்டோருக்கு ஆலோசனை என்கிறார் அமைச்சர் லால் காந்த அக்குறணை பிரதேச வெள்ள அனர்த்தத்துக்கு தீர்வு காண …

Free Visitor Counters Flag Counter

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

இக் கட்டுரையினை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் ஷேர் பண்ணிக் கொள்ளுங்கள்..