ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் ஒருவர் மரணித்த பிற்பாடு அம் மத்ரஸாவின் நிர்வாகியான மௌலவி சானாஸ் சொன்ன வார்த்தைகள்தான் இவை.

பின்னர் தன்னால் அடித்து வளத்தாட்டப்பட்ட மாணவனை பாம்பு கடித்துவிட்டதாகவும், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் நாடகமாடிய வரும் இதே மெளலவிதான்.

இச் சம்பவம் தற்கொலைதான் என கதை பரப்பி குறித்த மௌலவி தப்பிக்க முனைந்த போதிலும் இதனைக் கொலை என நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களும் சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் தெரிவிக்கின்றனர். முஸ்லிம் சமூகத்தை பேரதிர்ச்சிக்குள்னாக்கிய இச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மெளலவி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் சம்பவதினத்தன்று என்ன நடந்தது என அம்மத்ரசாவில் உதவியாளராக கடமையாற்றிய சாய்ந்தமருதைச் சேர்ந்த பெண்மணியைச் சந்தித்து உரையாடினோம். அவரது வாக்குமூலத்தை அவ்வாறே தருகிறோம்.

“நான் அன்றைய தினம் இரண்டரை மணிக்கு மத்ரசாவினுள் நுழைந்த போது மரணித்த மாணவனான முஸ்அப்பை கண்டேன். சாப்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்தார். பின்னர் நான்கரை மணியளவில் மத்ரசாவிலிருந்து வீட் டுக்கு வந்து மீண்டும் 6.30 மணியளவில் மத்ரசாவுக்கு சென்றேன். அப்போது இந்த சம்பவம் நடந்து முடிந்திருக்க வேண்டும். நான் மேல் மாடிக்குச் சென்று எனது பேஸ் கவரை கழற்றி விட்டு ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்ற போது மேல் மாடியில் இருக்கின்ற பிள்ளைகள் மஹ்ரிப் தொழுவதை அவதானித்தேன். அந்த நேரம் கீழ் தளத்திலே இருந்த மாணவர்கள் தொழவில்லை. அப்போதுதான் மத்ரசா அதிபரான சானாஸ் மௌலவி ‘ஒரு ஆள அடித்து வளர்த்தாட்டி வச்சிருக்கன்’ என்றார். எனக்கு மட்டுமல்ல அவ்விடத்தில் நின்ற அனைவருக்கும் அவர் கூறிய இந்த வார்த்தை தெளிவாக கேட்டது.

அப்போது நான் ‘யார வளத்தாட்டி வச்சிருக்கிறீங்க என கேட்டேன். அதற்கு அவர் யாரை அடித்துள்ளேன் என்று பெயர் குறிப்பிடவில்லை. பின்னர் நான் எதற்கு அடித்தீர்கள் என்று கேட்டேன். ‘நின்று கொண்டு தலையில் தொப்பி இல்லாமல் சூ பேய்ந்தான்’ என்று கூறிவிட்டு அத்துடன் கதையை மௌலவி நிறுத்தி விட்டார். பின்னர் நான் ஓடி வந்து மதரசாவின் சி.சி.ரி.வி கமராவைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரம் ஒரு மாணவன் ஓடி வந்தான் அதன் பின்னர் இன்னும் சில மாணவர்கள் ஓடி வந்தார்கள். பிறகு ஏனைய மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். என்ன சுனாமியா வந்து விட்டது? ஏன் மாணவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

அந்த நேரம் மௌலவியின் சகோதரர் கதவைத் திறந்து கொண்டு வந்தார். பின்னர் மரணித்த மாணவனை பாத்ரூம் பகுதியில் இருந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள். என்ன என்று கேட்டேன். முஸ்அப் மயங்கி விழுந்துவிட்டான் என மௌலவி கூறினார்.
எப்படி மயக்கமுற்றார் என நான் மாறிக் கேட்ட போது ‘பாம்பு கடிச்ச என்றார் மௌலவி. பின்னர் பாத்ரூமுக்குள் பாம்பா என நான் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் தரவில்லை. அப்படியென்றால் மயக்கமுற்ற மாணவனுக்கு முதலுதவி செய்யுங்கள் என்று சொன்னேன். ஆனால் மெளலவி அதை கணக்கெடுக்கவில்லை. அதேநேரம் மாணவர்கள் ஏனைய முஅல்லிம்கள் எல்லோரும் மேல்மாடியிலேயே நின்றார்கள். இது அனைவருக்கும் தெரியும். பின்னர் மாணவனுக்கு சிலர் முதலுதவியை செய்தார்கள். இதனை கீழே இருக்கின்ற சி.சி.ரி.வி. கமராவில் பார்த்துக் கொண்டி ருந்தேன்.

பின்னர் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் ஓடி வந்து ‘அந்த பொடியன் மௌத்தாகிட்டான்’ என்று சொன்னான். அவ்வாறு சொன்ன மாணவன் அந்த மரணித்த மாணவனின் உறவுக்காரராசு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அதன் பிறகு மற்றொரு மாணவர் ஓடி வந்து சி.சி.ரி.வி கமராவின் சுவிட்சை ஓப்பண்ணினார். பின்னர் கமராவில் எதுவும் தெரியவில்லை. அதற்கு பிறகு மௌலவி தொலைபேசியில் ஏதோ பேசினார் பின்னர் மூன்று பேர் வந்தார்கள். சி.சி.ரி.வி கமராவின் வயர்களை கழற்றினார்கள். நான் அத்தோடு அங்கு ஓரிடத்தில் அமர்ந்துவிட்டேன். கேர்ட்டின் சீலையை இழுத்து மறைத்துவிட்டார்கள். பின்னர் பிள்ளைகளிடம் பாடத்தை கேளுங்கள் என்று கூறிவிட்டு மௌலவி அங்கிருந்து சென்றுவிட்டார்.

ஏதோ ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் மரணித்த மாணவன் யார் என்று விசாரித்தேன். அப்போதுதான் முஸ்அப் என்று சொன்னார்கள். கண் கலங்கி பீதியடைந்தேன். அதிர்ச்சியில் உறைந்து போனேன், நான் பகல் தானே முஸ்அப்பை கண்டேன் என்று கூறி அழுதேன்” என்றார்.

நடந்த விடயங்களை பொலிசாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ள இப்பெண்மணி தொடர்ந்தும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

CCTV பதிவுகளை அகற்றக் கோரிய மெளலவி அதேபோன்றுதான் சிசிரிவி பதிவுகளை அகற்றிச் சென்றவர்களும் நடந்த விடயங்களை பொலிசாருக்கு வாக்குமூலமாக வழங்கியுள்ளனர். இம் மத்ரசாவில் CCTVகளை பொருத்திக் கொடுத்த சேவை வழங்குனரை நாம் சந்தித்துப் பேசினோம்.

சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் எனக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து சிசிரிவி பதிவுகளை அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு நான் என்னால் வரமுடியாது என கூறிவிட்டேன். அத்துடன் ஏன் அவற்றை அழிக்க வேண்டும் என கேட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். பின்னர் இரவு 11 மணியளவில் மத்ரசாவில் மாணவர் ஒருவர் மரணித்துவிட்டதாக பதற்ற நிலை ஏற்பட்ட பின்னர்தான் எனது சகோதரர் என்னைத் தொடர்பு கொண்டு நாங்கள் சிசிரிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில்தான் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.

நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு சிசிரிவியில் பதிவாகியிருந்த காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதாகவும் ஹார்ட் டிஸ்கினை அகற்றிச் செல்லுமாறும் மூன்று தினங்களின் பின்னர் அதனைக் கொண்டு வந்து பொருத்தித் தருமாறு கேட்டதாகவும் சொன்னார். இதற்காக 1000 ரூபா பணத்தையும் மௌலவி வழங்கியுள்ளார். அதுமாத்திரமன்றி பதற்ற நிலை தோன்றிய பிறகு குறித்த மௌலவி அடிக்கடி தொலைபேசி அழைப்பை எடுத்து அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சிசிரிவியை அகற்றிய மூவரிடமும் பொலிசார் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

அதேபோன்றுதான் இம் மத்ரசாவில் கல்வி கற்று சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னராக விலகி வீடு சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த மாணவர் ஒருவரையும் நாம் சந்தித்தோம். மத்ரசாவின் அதிபரான சானாஸ் மௌலவி எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வார் என்பதை அவரது அனுபவத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

“நானும் ஜனாஸாவாகத்தான் வந்திருப்பேன்”

“மதரசா அதிபர் மௌலவி அவர்கள் மாணவர்களை தாக்குவார். வயர், திரைச்சீலையை தொங்கவிடும் பொல்லு, தடி போன்றவைகளினாலேயே தாக்குவார். அங்குள்ள சிரேஷ்ட மாணவர்கள் எங்களைப் போன்ற சின்ன வகுப்பு மாணவர்களை வேண்டுமென்றே பிழையாக சொல்லிக் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் அவர் எங்களைத் தாக்குவார். என்னையும் பல தடவைகள் தாக்கியுள்ளார்.

அவர் தாக்கும் போது சில மாணவர்கள் சப்தமிட்டு அழுவார்கள். இந்த நிலையில் தொடர்ந்து இங்கு ஒதுவதென்பது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதனால் தான் ஒருநாள் நான் கல்வி கற்றுக் கொண்டிருந்த சாய்ந்தமருதிலுள்ள பாடசாலைக்கு வந்தபோது தந்தையிடம் விடயத்தைக் கூறி நான் ஊருக்கு வந்து விட்டேன். நான் அங்கு 11 மாதங்கள் ஓதினேன். இக் காலப்பகுதியில் அவர் மாணவர்களை அடிமையாகவே நடாத்தினார். விலகிவராதிருந்தால் நானும் ஜனாஸாவாகத்தான் வந்திருப்பேன்” என்றார்.

இந்த மாணவனின் தந்தையிடமும் உரையாடினோம். ‘மத்ரசாவின் அதிபரான மௌலவியின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. அங்கு ஒரு நாள் மதரசாவுக்குச் சென்றிருந்த போது அதிபர் வெளியூரைச் சேர்ந்த ஒரு மாணவனைத் தாக்கி மேல் மாடியிலிருந்து அழைத்து வருவதைக் கண்டேன். பின்னர் அந்த மாணவனைத் தாக்க வேண்டாம் எனக் கூறினேன். இதன் பிறகே எனது மகனையும் விலக்கிக் கொண்டு வந்தேன். விலக்கி வீட்டுக்கு கூட்டி வந்த பிறகு ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்த அந்த மௌலவி, மகனை நீங்கள் விலக்கினாலும் பரவாயில்லை. நாம் தொடர்ந்தும் தொடர்பில் இருப்போம் என்று கூறி சலாம் கூறிச் சென்று விட்டார்” எனவும் தெரிவித்தார்.

மரணித்த மாணவனின் குடும்பத்தினர் மரணித்த மாணவனின் பெற்றோரும் குடும்பத்தினரும் கவலையோடும் கண்ணீரோடும் தனது மகனுக்கு நடந்த அநியாயத்தை நினைத்து கண் கலங்குகின்றனர், தனது மகனுக்கு நியாயம் வேண்டும் என்று கூறும் பெற்றோர் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்லமாட்டார் என்பதில் உறுதியாகவுள்ளனர். அவர் அமைதியானவர் எங்களது குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். அனைவரும் ஆண் பிள்ளைகளே எமது மூத்த மகனான முஸ்அப் புனித அல்குர் ஆனை மனனம் செய்து ஹாபிழாக வேண்டும் என்று ஆசைப்பட்டோம். மகனின் விருப்பப்படியே நாங்கள் அந்த மதரசாவுக்கு கொண்டு போய் சேர்த்தோம். மகனின் நண்பன் அதில் ஓதுகின்றார் என்பதற்காகவும் மகனின் நண்பரின் தந்தையும் எங்களோடு பழக்கம் என்பதாலுமே அந்த மதரசாவுக்கு மகனை கொண்டு போய் சேர்த்தோம்.

இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசி அழைப்பு வந்தது. மதரசா அதிபரான சானாஸ் மௌலவி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மதரசாவுக்கு வந்து விட்டுச் செல்லுங்கள் என்றார். உடனேயே போன போது அங்கு மக்கள் கூடியிருந்தனர். ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக உணர்ந்தோம்.

பிள்ளை வைத்தியசாலையில் இருப்பதாக அங்கு நின்றவர்கள் கூறினார்கள். அங்கு சென்ற போதுதான் மகன் மரணித்துடதாக அறிந்தோம். எமது பிள்ளை தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு நீதி வேண்டும். எனது கணவருக்கு அண்மைக் காலமாக சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்னும் வேதனையை அதிகரிக்கச் செய்துள்ளது. மகன் தந்தைக்கும் குடும்பத்துக்கும் உதவியாக இருந்தவர்.

மகனை மதரசாவில் சேர்த்ததன் பின்னர் மௌலவி அடிக்கிறார் என்று சொல்லி இருந்தால் நாங்கள் மகனை விலக்கி வீட்டுக்கு அழைத்து வந்திருப்போம். மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதிக்காக காத்திருக்கிறோம். இறைவனின் நீதியும் கிடைக்கும் என பெற்றோர் தெரிவித்தனர்.

இந்த மாணவர் சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மதரசாவில் இணைவதற்கு முன்னர் காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்திலும் காத்தான்குடி பிஸ்மி இடை நிலைப் பாடசாலையிலும் கல்வி கற்று வந்துள்ளார். இம் மாணவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிஸ்மி இடை நிலைப் பாடசாலைக்கு வருவதை நிறுத்தியுள்ளார். இது குறித்து பாடசாலை நிருவாகம் பெற்றோரை தொடர்பு கொண்ட போது மகனை மதரசாவில் சேர்க்கவுள்ளதாக பெற்றோர் பதிலளித்ததாக காத்தான்குடி பிஸ்மி இடை நிலைப் பாடசாலையின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார். “இந்த மாணவர் அமைதியான சுபாவமுடையவர். வகுப்பில் சக மாணவர்களுடன் உற்சாகமாக காணப்பட்ட ஒரு மாணவர். எனினும் இவரை மெல்லக் கற்கும் மாணவர் என நாம் அடையாளம் கண்டிருந்தோம். 2022 ஜனவரி முதல் 2023 ஒக்டோபர் வரை இவர் எம்மிடம் கல்வி கற்றார். இவரது மரணத்தினால் எமது பாடசாலை நிர்வாகமும் மாணவர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் இந்த மரணம் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

குறித்த மதரசாவின் மௌலவி கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் இதுவரை 40 பேரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். குறித்த மதரசாவின் சி.சி.ரி.வி. கமரா பதிவுகளைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் அதனை பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டு ஜனாஸா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதையடுத்து ஜனாஸா சிறுவனின் ஊரான காத்தான்குடிக்கு கொண்டு வரப்பட்டு பெருந்திரளான மக்களின் பிரார்த்தனைகளுடன் காத்தான்குடி மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு கடந்த வியாழக்கிழமை (07) மாலை அதே பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா தொழுகையை மாணவனின் தந்தை நடாத்தினார். காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் அஷ்ஷெய்க் ஏ.எல் சபீல் நளீமி மற்றும் சாய்ந்தமருது மக்கள் சார்பில் சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.சலீம் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

சாய்ந்தமருது முகையதீன் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹிபத்துல் கரீம், சாய்ந்தமருது ஜனாஸா மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள். உலமாக்கள் பலரும் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர். இதேவேளை காத்தான்குடி மாணவனின் மரணத்தையடுத்து சாய்ந்தமருது ஜம் இய்யத்துல் உலமா, சார்ந்தமருது ஜனாஸா நலன்புரிச் சங்கம் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்றும் கடந்த வியாழக்கிழமை மாலை காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது சாய்ந்தமருதில் காத்தான்குடி மாணவனுக்கு நடந்த அநீதியை தாம் கண்டிப்பதாகவும் கவலையை தெரிவிப்பதாகவும் சாய்ந்தமருது பிரதிநிதிகள் தெரிவித்தனர். மாணவனின் குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான அத்தனை உதவிகளையும் சாய்ந்தமருது சார்பில் செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

உரியமுறையில் மௌலனிப் பட்டம் பெறாத அதிபர் இந்த மத்ரசாவின் அதிபராக செயற்பட்ட வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருமான சானாஸ் மௌலவி என்பவர் முறையாக மத்ரசா ஒன்றில் ஓதி சான்றிதழ் பெற்றவர் அல்ல என சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த மௌலவி வைத்திருந்ததாக கூறப்படும் போலிச்சான்றிதழில் பெயர் குறிப்பிடப் பட்டிருந்த மத்ரசாவின் நிர்வாகிகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட மௌலவி மீது மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் இதற்கு முன்னரும் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் விடயத்தைப் பெரிதுபடுத்தக் கூடாது என்பதால் பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் வாங்கியுள்ளனர்.

இம் மத்ரசா அதிபர் கொடூரமானவர் எனஅப் பகுதி மக்கள் நன்கு அறிந்திருந்தனர். இதனால்தான் நீ ஒழுங்காக வீட்டில் ஓதாவிட்டால் சானாஸ் மௌலவியின் மத்ரசாவில் சேர்த்து விடுவோம்” என தமது பிள்ளைகளுக்குப் பயம் காட்டுவதாக அப் பிரதேசத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார். மத்ரசா ஒன்றை நடாத்துவதற்கு எந்த வகையிலும் பொருத்தமற்ற மூன்று மாடிக் கட்டிடத்தில் முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் பிள்ளைகளைச் சேர்த்து மத்ரசா ஒன்றை நடாத்துவதற்கான அனும தியை முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களம் எந்தவகையில் வழங்கியது எனும் கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். MRCA/QA/AM/303 எனும் பதிவு இலக்கத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட் டுள்ளதாக மத்ரசாவின் பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்ரசா தற்போது மூடப்பட்டு மாணவர்கள் அனைவரும் வீடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் இதன் சட்டபூர்வமான தன்மை குறித்து திணைக்களம் நடவ டிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

எம்.எஸ்.எம்.நூர்தீன் விடிவெள்ளி மலர் 16 – இதழ் 6 14-12-2023

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் - முஸ்அப் மரணத்தில் நடந்தவை

இக் கட்டுரையினை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் ஷேர் பண்ணிக் கொள்ளுங்கள்..