ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய பொரளை பொலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டார்.

குறித்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையை பொரளை பொலிஸார் நேற்று நீதிமன்றில் சமர்ப்பித்தனர். கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி எம்.என். ரூஹுல் ஹக்கின் கையெழுத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், குழந்தை ஹம்தி ஒற்றை சிறுநீரகத்துடன் இருந்துள்ளதாகவும் அது தற்செயலாக நடந்த விபத்தை ஒத்த சம்பவத்தால் அகற்றப்பட்டமையால் மரணமடைந்துள்ளதாக கூற‌ப்பட்டுள்ளது.

இந்த விடயம் நேற்று நீதிமன்றில் பரவலான விமர்சனத்துக்கு உள்ளானது. குழந்தை ஹம்தி சார்பில் நேற்று மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகளான ரிஸ்வான் உவைஸ், வைத்தியர் வை.எல்.யூசுப், லுத்பி, அரவிந்து மனதுங்க மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் பிரேத பரிசோதனை அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் நீதிவானின் கவனத்தை ஈர்த்தனர்.

இதன்போது திறந்த மன்றில் பேசிய நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கியுள்ள சட்ட வைத்திய அதிகாரி ஏற்கனவே சில வழக்குகளில் வழங்கியுள்ள அறிக்கைகள் சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக கூறினார். அண்மையில் கூட அவரால் வழங்கப்பட்ட அறிக்கையொன்று சர்ச்சைக்குள்ளானதாகவும், அது தொடர்பிலான விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் அது குறித்து கருத்து கூற தான் விரும்பவில்லை எனவும் நீதிவான் இதன்போது குறிப்பிட்டார். அதனால் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை மட்டும் மையப்ப‌டுத்தி விசாரணைகளை முன்னெடுக்காது விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொரளை பொலிசாருக்கு உத்தரவிட்ட நீதிவான், குழந்தையின் மருத்துவ ஆவணங்களை விசாரணையாளர்களுக்கு வழங்க கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கும் உத்தரவிட்டார்.

இதன்போது, குழந்தை ஹம்திக்கு முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் அவரது பழுதடைந்த இடது பக்க சிறுநீகரத்துக்கு மேலதிகமாக நல்ல இயங்கு நிலையில் இருந்த வலது பக்க சிறுநீரகமும் அகற்றப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகளால் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

குறிப்பாக சத்திர சிகிச்சையின் பின்னர், அகற்றப்பட்ட ஒரு சிறுநீரகம் மட்டும் ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் வைத்தியர் சாந்தினி குலதுங்கவின் பெத்தலொஜி அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றின் அவதானத்துக்கு கொண்டுவந்து வலது சிறுநீரகத்துக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பினர். குழந்தைக்கு சத்திர சிகிச்சை வரை முன்னெடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களிலும் வலது, இடது என இரு சிறுநீரகங்களின் தொழிற்பாடு தொடர்பில் தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில், எந்த அடிப்படையில் குழந்தை ஒற்றை சிறுநீரகத்துடன் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவிக்க முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் கேள்வி எழுப்பினர்.
இவ்வாறான பின்னணியிலேயே விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, குழந்தை ஹம்தியின் மரண விசாரணைகள் இடம்பெற்றன. நேற்று குழந்தையின் தாய் பாத்திமா ரிசானா அப்துல் காதரிடம் சாட்சியம் பெறப்பட்டது. பொரளை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தயாசிரியின் நெறிப்படுத்தலில் இந்த சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

இதன்போது, கடந்த 2020.04.11 அன்று ஹம்தி, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் பிறந்ததாகவும், பிறப்பில் அக்குழந்தைக்கு எந்த நோய் நிலைமையும் இருக்கவில்லை எனவும் தாயார் சாட்சியமளித்தார்.

ஒன்பது மாதங்களின் பின்னர் ஏற்பட்ட நிலைமை மற்றும் அதற்காக குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பில் விரிவாக சாட்சியமளித்த தாயார், 2023 பெப்ரவரி மாதம் இடம்பெறவிருந்த சத்திர சிகிச்சையையே, வைத்தியர்கள் முன் கூட்டி கடந்த 2022 டிசம்பர் மாதம் செய்ததாக குறிப்பிட்டார்.

விஷேட வைத்தியர் ரந்துல ரணவக்க, வைத்திய நிபுணர் மலிக் சமரசிங்க மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் நவீன் விஜேகோன் தொடர்பிலும், அவர்கள் வழங்கிய சிகிச்சைகள் மற்றும் சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையின் பெற்றோரை அழைத்து கூறிய விடயங்கள் தொடர்பிலும் தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்தார். தனது குழந்தையின் இரு சிறு நீரகங்களும் அகற்றப்பட்ட மையே அவரது உயிரிழப்புக்கு காரணம் என தான் நம்புவதாக தாயார் நீதிமன்றில் கூறினார்.

இதனையடுத்து மேலதிக மரண விசாரணை சாட்சிப் பதிவு எதிர்வரும் 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

M.F அய்னா – விடிவெள்ளி பத்திரிகை – பக்கம் 01 (மலர் 05 – இதழ் 34)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter