5,000 ரூபா நிவாரணத்தை இனியும் வழங்க முடியாது!

கொரோன வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா என்ற அடிப்படையில் 26 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 53 இலட்சம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா என்ற அடிப்படையில் இது வழங்கப்பட்டது. ஆனால் இனியும் இதனை வழங்க முடியாது என்கிறது அரசாங்கம்.

கொவிட் -19 வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக இரண்டு மாதகாலம் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடு குறித்து வினவியபோதே சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த இரண்டு மாதங்களாக நாடு முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தத் தாக்கமானது அடுத்துவரும் காலங்களில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் 53 இலட்சம் குடும்பங்கள் நிவாரணத் தொகையை பெற்று வருகின்றனர்.

இதுவரையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்பட்ட மொத்தத்தொகை 26 ஆயிரம் மில்லியன் ரூபாய்களாகும். மிகப்பெரிய தொகை இவ்வாறு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இனியும் இதனை வழங்குவதில் நெருக்கடிகள் உள்ளது.

சுமார் 53 இலட்சம் குடும்பங்கள் இவ்வாறு ஐயாயிரம் ரூபா நிவாரணத் தொகையை பெற்று வருகின்றனர். தொடர்ந்தும் இந்த நிவாரணத் தொகையை வழங்குவதால் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளுக்குள் தள்ளப்படும். அரசாங்கம் பாரிய சுமையை சுமந்துகொண்டுள்ளது.

இனியும் இவ்வாறு சுமைகளை அரசாங்கத்தினால் சுமக்க முடியாது. ஆகவே தான் நாட்டில் ஊரடங்கை தளர்க்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மக்களின் அன்றாட செயற்பாடுகள் படிப்படியாக முன்னெடுக்க இடமளிக்கப்படவுள்ளது என்றார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter