இந்தியாவிற்கு எதிராக நேற்றுமுன் தினம் பாகிஸ்தான் அணியின் வெற்றி, உலகக் கிண்ணப் போட்டிகளில் அந்த அணி பெற்ற மிக முக்கியமான வெற்றியாக, சாதனையாக பார்க்கப்படுகிறது.
துவண்டு போய் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட்டை இந்த ஒற்றை வெற்றி உசுப்பி விட்டுள்ளது. உலக நாடுகள் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் மீது கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை, வழியை இந்த வெற்றி பெற்றுத்தந்துள்ளது. இந்தியாவை வீழ்த்தி வெற்றியோடு பாகிஸ்தான் இந்த போட்டியை தொடங்கி இருக்கிறது.
நேற்று முன்தினம் நாணயச்சுழற்சியில் தோல்வி அடைந்து முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரிலேயே, விக்கெட் இழப்பின்றி 152 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டால் வென்றது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 15 வருடங்களாகவே பாகிஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டு வந்தது. முதலில் இந்தியாவுடன் நேருக்கு நேர் மோத முடியாத காரணத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வருமானம் குறைந்தது. அதன்பின் ஐசிசி போட்டிகளில் தொடர் தோல்வியால் பாகிஸ்தான் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் ஆட பெரிதாக எந்த அணியும் முன்வரவில்லை.
பாகிஸ்தானுக்கு வந்த நியூசிலாந்து அணி கூட நாணயச்சுழற்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்பை காரணம் காட்டி அங்கிருந்து வெளியேறியது. சர்வதேச அளவில் இதனால் பாகிஸ்தான் தொடர் அவமானங்களை சந்தித்தது. அதிலும் பாகிஸ்தான் தனது சொந்த மைதானத்தை அமீரகத்திற்கு மாற்றிய பின்பும் கூட பெரிய அணிகள் பாகிஸ்தானோடு ஆட முன் வரவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பாகிஸ்தானை எதிர்கொள்ள விரும்பவில்லை.
இதனால் பாகிஸ்தானும் வேறு வழியின்றி சிம்பாப்பே, இலங்கை, பங்களாதேஷ் போன்ற அணிகளுடன் ஆடியது. பாகிஸ்தானின் கிரிக்கெட் அணிக்கு இந்த ஆட்டங்கள் பெரிதாக உதவவில்லை. இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகளிலும் கூட பாகிஸ்தான் வீரர்கள் தடை செய்யப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் அணி மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவிடப்பட்டது. பாகிஸ்தானை யாருமே பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பாகிஸ்தான் இதை பற்றி எல்லாம் கவலையே படவில்லை. ஐபிஎல் இல்லை என்றால் என்ன. நாங்கள் எங்கள் ஆட்டத்தை மெருகேற்றுவோம் என்று கவனமாக புது புது சம்பியன்களை பாகிஸ்தான் உருவாக்கியது.
மூத்த வீரர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு பாபர் தலைமையில் பல புதிய நட்சத்திரங்களை கொண்டு வந்தது. ரிஸ்வான், பக்கர் சாமான், ஷாகீன் போன்ற பல வீரர்கள் அணிக்குள் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ந்து மெருகேற்றப்பட்டனர். பாகிஸ்தான் தனக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும், மேடை கிடைக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தது.
அப்படி ஒரு மேடைதான் நேற்று முன் தினம் அந்த அணிக்கு கிடைத்தது.. உலகக்கிண்ண ரி 20 தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் காத்துக்கொண்டு இருந்தது. பல வருட அவமானங்களுக்கு இந்தியாவை வீழ்த்தி பதில் கொடுக்கலாம் என்று காத்துகொண்டு இருந்தது. அந்த வெற்றியை நேற்று முன்தினம் பாகிஸ்தானும் ஒரு விக்கெட் கூட விழாமல் ருசித்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் யாருமே நேற்று வெற்றிக்கு பின் கொஞ்சம் கூட முகத்தில் ஆக்ரோஷத்தை காட்டவில்லை. போட்டி முடிந்த பின் சிரித்தபடி வந்த ரிஸ்வான், கோலியிடம் கை குலுக்கி சிரித்த பாபர் ஆசம் என்று ஒவ்வொரு வீரர்களும் நேற்று முன்தினம் இந்தியாவை வீழ்த்தியபின் மிகவும் தன்மையுடன் நடந்து கொண்டனர்.
அரசியல் தாண்டி இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதனால்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூட நேரடியாக அணி மீது கவனம் செலுத்தினார்.
வெளியே நடப்பது நடக்கட்டும். நீங்கள் கவனமாக ஆடுங்கள் என்று கூட்டம் போட்டு பிரதமர் இம்ரான் கான் அந்த அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார். அணியின் தேர்வில் அவர் நேரடி கவனம் செலுத்தினார். அந்த அளவிற்கு பாகிஸ்தானுக்கு இந்த போட்டி முக்கியமானதாக இருந்தது.
நேற்று முன்தினம் இந்தியா வென்று இருந்தால் அது இந்தியாவிற்கு இன்னொரு வெற்றி. இந்தியா கண்டிராத வெற்றி கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் இப்போதும் இந்தியாதான் பெஸ்ட். ஆனால்.. பாகிஸ்தானின் இந்த வெற்றி.. அந்த அணிக்கு கிடைத்த புதிய அடையாளம். கிரிக்கெட் வரைபடத்தில் காணாமல் போய் இருந்த பாகிஸ்தான் மீண்டும் தனது தடத்தை அழுத்தமாக வெளிப்படுத்திய தற்கான அடையாளம்தான் இந்த வெற்றி. பல நாடுகளின் புறக்கணிப்பு, ரசிகர்களின் ஏளனம், சமூக ஊடகங்களின் கிண்டல் என்று பல விஷயங்களுக்கு நேற்று முன் தினம் பாபர் தலைமையிலான பாக். பதில் சொல்லி இருக்கிறது.
இந்தியாவை வீழ்த்திய கோபம் பலருக்கும் பாக் மீது இருந்தாலும் ஒரு கிரிக்கெட் ரசிகராக பாகிஸ்தான் ஆடிய ஆட்டம் பலரையும் கவர்ந்து இருக்கும். நேற்று முன் தினம் பாபர் ஆடிய கவர் டிரைவையும், ரிஸ்வானின் புல் ஷாட்களையும் யாரும் மறக்க மாட்டார்கள். தங்கள் கிரிக்கெட் அணியை மீளக் கட்டியெழுப்ப பாகிஸ்தானுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு ‘மாஸ்’ வெற்றிதான்.. அந்த வெற்றி நேற்று முன்தினம் அந்த அணிக்கு இந்தியாவிடம் இருந்து கிடைத்துள்ளது!