மஹிந்தானந்தவின் புதிய அரசியல்

இலங்கையிலும்‌ இந்தியாவிலும்‌ கொரோனாவின்‌ அச்சுறுத்தல்‌ மிக பயங்கரமாக சூழ்‌நிலையிலும்‌ அதிகார வர்க்கத்தினர்‌ முஸ்லிம்‌களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை திட்டமிடுவதிலேயே குறியாக இருக்கின்‌றனர்‌. இரு நாடுகளின்‌ ஆட்சியாளர்களும்‌ முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்வைத்தே ஆட்சி பீடம்‌ ஏறினர்‌ என்பது மறுக்க முடியாத உண்மை.

அமெரிக்காவும்‌ ஐரோப்பாவும்‌ அந்த உயிரியல்‌ வைரசுடனான யுத்தத்தில்‌ திண்டாடிக்கொண்டிருக்கும்‌ நிலையில்‌ இந்தியாவும்‌ இலங்கையும்‌ கொரானாவுடன்‌ முஸ்லிம்கள்‌ மீதான இனவாத யுத்தத்தை நடாத்திக்‌ கொண்டிருக்கின்றன என்பதே கவலைக்குரிய செய்‌தியாகும்‌.

குறிப்பாக இலங்கையில்‌ இனவாதத்தை கையிலெடுத்த சில ஊடகங்கள்‌ அதன்‌ மூலம்‌ ராஜபக்ஷாக்களை மீண்டும்‌ ஆட்சிக்கு கொண்டுவந்தன. குறித்த சில ஊடகங்களே மீண்டும்‌ மீண்டும்‌ முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை பல்வேறு வகையிலும்‌ வடிவமைத்து நாட்டை பாதாளத்துக்கு கொண்டு செல்கின்றன. தற்போது கொவிட்‌ 19 உயிர்‌கொல்லி தொற்று நோயை நாட்டில்‌ பரப்பும்‌ மக்களாக முஸ்லிம்களை காண்பிப்பதே அந்த சில ஊடக நிறுவனங்களின்‌ போக்காக இருக்கின்றது. அதனை திட்டமிட்டே மேற்‌கொண்டு வருகின்றனர்‌.

இந்நிலையில்‌ கடந்த வாரம்‌ இடம்பெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றின்‌ போது, கண்டியில்‌ முஸ்லிம்கள்‌ கொரானா வைரஸை பரப்புவதற்கு காரணமாக இருப்பதாக முன்னாள்‌ இராஜாங்க அமைச்சர்‌ மஹிந்‌தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்‌. குறித்த நிகழ்ச்சியின்‌ விளம்பர இடைவேளையின்போது ஒளிபரப்புக்கு தேவையற்ற சில காட்சிகள்‌ கூட கசியவிடப்பட்டிருந்தன. குறித்த நிகழ்ச்சி கலந்துகொண்ட பின்னர்‌ மஹிந்தானந்த அளுத்கமகே ஒரு காணொளியை வெளியிட்‌டிருந்தார்‌. 4 நிமிடங்கள்‌ அடங்கிய குறித்த காணொளியில்‌, “தெரண தொலைக்காட்சி விளம்பர இடைவெளியின்போது நடந்த சம்பவம்‌ தொடர்பில்‌ சமூகவலைத்தளங்களில்‌ ஒரு விமர்சனம்‌ உள்ளது. அது தொடர்பாக விளக்கமளிக்க விரும்புகிறேன்‌.

அன்றை அரசியல்‌ விவாத நிகழ்ச்சியின்‌ தலைப்பாக கொரோனா வைரஸைப்‌ பற்றி அரசாங்கம்‌ எடுத்திருக்கின்ற நடவடிக்கைகள்‌ பற்றியதாக அமைந்திருந்தது. அதேபோன்று கண்டி மாவட்டத்தில்‌ ஒரு கொரோனா தொற்றுக்குள்ளானவர்‌ இனங்காணப்பட்டுள்ளார்‌. எனவே, கண்டி மாவட்டத்தில்‌ கொரோனா பரவுவதை தடுப்‌பதற்காக அரசாங்கம்‌ எடுத்துள்ள நடவடிக்‌கைகளும்‌ எமக்கு இருக்கின்ற சவால்களும்‌ பற்றியே பேசப்பட்டது. அன்றைய விவாதம்‌ நடந்தபோது இருந்த தரவுகளின்படி 20 கொரோனா தொற்று சந்தேக நபர்கள்‌ இனங்‌காணப்பட்டனர்‌. அதில்‌ 19 பேர்‌ முஸ்லிம்களாக இருந்தனர்‌.

முஸ்லிம்கள்‌ மிகவும்‌ பொறுப்புடன்‌ நடந்து கொண்டால்‌ நன்றாக இருக்கும்‌ என கலந்துரையாடலில்‌ மீண்டும்‌ மீண்டும்‌ வலியுறுத்திக்‌ கூறினேன்‌. முஸ்லிம்கள்‌ ஒரு சமூகம்‌ என்ற வகையில்‌ மிகவும்‌ செறிவாக வாழ்கின்றனர்‌. அது அவர்களின்‌ கலாசாரம்‌. ஒரே வீட்டினுள்‌ பெருமளவிலானவர்கள்‌ சீவிக்கின்றனர்‌.அவர்கள்‌ கூட்டாக பள்ளிக்குச்‌ செல்கின்றனர்‌. ஒன்று கூடாமல்‌ வீட்டில்‌ இருக்குமாறு வைத்‌தியர்கள்‌ ஆலோசனை வழங்குகின்றனர்‌. ஒன்று கூடுவதாக வைரஸ்‌ தாக்கம்‌ அதிகரிப்‌பதாக எச்சரிக்கின்றனர்‌.

ஊரடங்கு சட்டம்‌ அமுல்படுத்தப்பட்ட பின்னரும்‌ நாவலப்பிட்டி பகுதியில்‌ முஸ்‌லிம்கள்‌ கூட்டம்‌ கூட்டமாக இருந்ததை நாம்‌ கண்டோம்‌. ஒன்றிணைந்து கிரிக்கெட்‌ விளையாடினர்‌. வீதிகளில்‌ சுற்றி திரிந்தனர்‌. அவர்கள்‌ கட்டுப்படுவதிவல்லை. ஊரடங்கு சட்டத்தை கொஞ்சமேனும்‌ மதிப்பதில்லை.

முஸ்லிம்கள்‌ கொரோனா ஒரு சவாலாக முகம்கொடுப்பதில்லை. எனவே, முஸ்லிம்‌ தலைவர்களை பொலிஸ்‌ நிலையத்திற்கு அழைத்து இது குறித்து எச்சரித்து பள்‌ளிகளில்‌ மக்களுக்கு தெளிவூட்டுமாறு கூறினோம்‌. ஏனென்றால்‌ முஸ்லிம்‌ சகோதரர்கள்‌ இவற்றை கணக்கிலெடுக்காமல்‌ வழமையான சாதாரண நாட்களை போன்று இருக்கின்றனர்‌.

தொலைக்காட்சி அரசியல்‌ கலந்துரையாடல்‌ நடந்தபோது அக்குறணை கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரை உறுதிபடுத்தியிருந்தோம்‌. அந்த நோயாளியை இனங்கண்ட பின்‌ அவரின்‌ வீட்டுக்குச்‌ சென்று, அவர்‌ சென்ற இடங்கள்‌ பற்றி விசாரித்தோம்‌. பிள்‌ளைகள்‌ தந்த வீட்டிலேயேதான்‌ இருந்ததாக கூறினார்‌.

எனினும்‌, அவர்‌ மக்கள்‌ வங்கிக்கு சென்‌றிருந்ததையும்‌, பேக்கரிக்கு, இறைச்சிக்‌ கடைக்கு, நகரிலுள்ள அவரின்‌ கடைக்குச்‌ சென்றிருந்ததையும்‌, கெலிஓயாவுக்கு போய்‌ வந்ததையும்‌ அவர்‌ பயணித்த வாகனம்‌ கம்‌பளைக்கு சென்றதையும்‌ பின்னர்‌ எம்மால்‌ அறிந்துகொள்ள முடிந்தது.

நாம்‌ இவற்றை கண்டறிய நான்கு நாட்கள்‌ சென்றன. இந்த தகவல்களை தொலைபேசியின்‌ மூலமாகவே தெரிந்துகொண்டோம்‌. இந்த தகவல்களை முற்கூட்டியே கூறாததன்‌ விளைவாக பெரும்பாலானோரை தனிமைப்படுத்த எமக்கு நேரிட்டது.

இவ்வாறு தகவல்களை மறைத்ததன்‌ காரணமாக இன்னும்‌ எத்தனைபேர்‌ நோயாளிகளாகப்‌ போகின்றனர்‌ என்பது எமக்குத்‌ தெரியாது.எனவேதான்‌, நாம்‌ பொதுவாக முஸ்லிம்களிடம்‌ இதுபற்றி மிகவும்‌ பொறுப்‌புடன்‌ நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள்‌ விடுத்தோம்‌. அந்த கலந்துரையாடலின்‌ விளம்பர இடைவேளையின்போது நீர்கொமும்பு பிரதேசத்தின்‌ ஒரு முஸ்லிம்‌ நபர்‌ மரணித்ததை பற்றி ஒருவர்‌ கூறினார்‌. அதனை அடக்கம்‌ செய்வதற்கு அரசாங்கம்‌ அனுமதிக்‌காமையின்‌ காரணமாக உலமா சபை எதிர்ப்பு தெரிவித்தாகவும்‌ அவர்‌ கூறினார்‌.

அந்த நேரத்தில்‌ நான்‌ தெளிவாக கூறினேன்‌, உலமா சபை என்ன? அனுமான்‌ சபை என்ன? யார்தான்‌ எதிர்ப்பை வெளியிட்டாலும்‌ நோய்‌ பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம்‌ ஏதேனும்‌ ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளுமாயின்‌ அதற்கு அனைத்து மத இயக்கங்களும்‌, அரசியல்‌ குழுக்களும்‌ ஒத்துழைக்க வேண்டும்‌.

நீர்கொழும்பு பிரதேசமானது நிலத்தை தோண்டினால்‌ நீர்‌ வரக்கூடிய பகுதியாகும்‌. அந்த நீருடன்‌ கிருமிகள்‌ சேர்ந்தால்‌ அதிகளவானோருக்கு நோய்‌ பரவக்‌ காரணமாக அமையும்‌.

எனவே அதனை தடுப்பதற்கே அரசாங்கம்‌ இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வர வேண்‌டிய சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே சில அரசியல்‌ கட்சிகளும்‌ சில அடிப்படைவாத அரசியல்‌ குழுக்களும்‌ இதனை தேர்தலை இலக்காகக்கொண்டு அரசாயலாக்கியிருக்கின்றனர்‌. அவர்கள்‌ தங்‌களின்‌ சுயஇலாபத்திற்காக இதனை கூறுகின்‌றனர்‌. அது மிகவும்‌ கவலையளிக்கக்‌ கூடிய விடயமாகும்‌.

எனவே தற்போது முஸ்லிம்‌ தலைவர்கள்‌ முஸ்லிம்‌ சமூகத்திடம்‌ கூட்டமாக ஒன்று கூட வேண்டாம்‌, பள்ளிக்குச்‌ செல்ல வேண்டாம்‌, அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்‌ எனகூற வேண்டும்‌.

முஸ்லிம்‌ அரசியல்‌ தலைமைகளும்‌ அராங்‌கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்‌ என மக்கள்‌ மத்தியில்‌ வலியுறுத்த வேண்டும்‌. ஆனால்‌ இவற்றை செய்யாது, முஸ்லிம்‌ தலைமைகள்‌ அரசியல்‌ நிகழ்ச்சி நிரலின்‌ அடிப்படையில்‌ செயற்படுவதையிட்டு வருந்துகிறேன்‌. எனவே நான்‌ கூறிய தெளிவான கருத்தை விளங்காது என்மீது வீண்‌ பழி சுமத்துவது பற்றி கவலைப்படுகின்றேன்‌.

நோய்‌ பரவுவதை தடுப்பதற்கு எடுக்கும்‌ அரசாங்கத்தால்‌ எடுக்கப்படும்‌ நடவடிக்கை களை எந்த மத அமைப்புகளும்‌ சவாலுக்கு உட்படுத்தக்‌ கூடாது என்பதே எனது நிலைப்‌பாடாகும்‌.

குறித்த வீடியோ காட்சிகள்‌ குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்கள்‌ முஸ்லிம்‌ சமூகத்தின்‌ மத்தியில்‌ எழுந்தன. இதன்‌ பின்னர்‌ குறித்த ஊடகம்‌ பொதுஜனபெரமுன, உலமாசபை, மற்றும்‌ வக்பு சபை உறுப்பினர்களை அழைத்து நிகழ்ச்சியொன்றை நடத்தியிருந்‌தது. இதன்போதும்‌, பல்வேறு குற்றச்சாட்டுகளை முஸ்லிம்‌ சமூகம்‌ மீது அவ்வூடகம்‌ முன்‌வைத்தது. எனினும்‌, முன்னர்‌ இடம்பெற்ற அரசியல்‌ விவாத நிகழ்ச்சியின்போது, முஸ்‌லிம்கள்‌ மீது திட்டமிட்டு அபாண்டம்‌ சுமத்‌தியமை தொடர்பில்‌ மன்னிப்பு கோரவோ, வருத்தம்‌ தெரிவிக்கவோ இல்லை.

இந்‌ நிலையில்‌ மஹிந்தானந்தவின்‌ கருத்துகள்‌ தேர்தலை இலக்காக கொண்ட அரசியல்‌ நகர்வு என முன்னாள்‌ அமைச்சர்‌ எம்‌.எச்‌.ஏ. ஹலீம்‌ குற்றம்‌ சுமத்தினார்‌. “கண்டி மாவட்டத்தின்‌ முக்கிய நகர்‌ புறங்களில்‌ அதிகம்‌ வசிப்பவர்கள்‌ முஸ்லிம்களாவர்‌. குறிப்பாக அக்குறணை, நாவலப்பிட்டி, கம்பளை போன்ற நகர்‌ பகுதிகளிலும்‌ முஸ்‌லிம்கள்‌ மிகச்‌ செறிவாக வாழ்கின்றனர்‌. ஊரடங்குச்‌ சட்டம்‌ பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர்‌ மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. அது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, சிங்களவர்களுக்கும்‌ தெளிவு இருக்கவில்லை. தமிழர்களுக்கும்‌ அப்படித்தான்‌, இருந்தாலும்‌ ஓரிரு தினங்களில்‌ முஸ்லிம்கள்‌ தம்மை சுதாகரித்துக்கொண்டனர்‌. இருப்பினும்‌, சில ஊடகங்களும்‌ இனவாதத்தை மையப்படுத்தி அரசியல்‌ செய்யும்‌ நபர்களும்‌ முஸ்லிம்களை மட்டும்‌ முன்னுரிமைப்படுத்தி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தமது இனவாத நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக்‌ கொண்டதாகும்‌.

சிங்கள மக்கள்‌ மத்தியில்‌ முஸ்லிம்களை இன்னும்‌ மோசமாக சித்திரிப்பதற்கும்‌ இந்த கொரோனா விடயம்‌ பயன்படுத்தப்படுவதையிட்டு மிகவும்‌ கவலையடைகிறேன்‌. இதுதவிர, முஸ்லிம்களும்‌ தம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்‌. குறிப்பாக, கண்டி மாவட்ட முஸ்லிம்கள்‌ அரசியல்‌ ரீதியகவும்‌, பொருளாதார ரீதியாகவும்‌ பழிவாங்கப்படுகின்றனர்‌. இதனை தொடர்ந்து முன்னெடுத்துச்‌ செல்வதற்கு நாம்‌ இடமளிக்கக்‌கூடாது என்றார்‌.

மஹிந்தானந்த அளுத்கமகே, இனவாதகருத்துக்கள்‌ தெரிவிக்கும்‌ அரசியல்வாதியாக முன்னர்‌ காணப்படவில்லை. என்றாலும்‌ தற்போதைய அரசியல்‌ போக்கில்‌ அவரும்‌ இவ்வாறான பிற்போக்கு அரசியல்‌ நடவடிக்‌கையில்‌ ஈடுபடுவதை காலத்தின்‌ தேவையாக கருதுகிறார்‌ போல.

குறிப்பாக கண்டி மாவட்ட ஒரு பகுதி சிங்‌களவர்களின்‌ வாக்குகளை மையப்படுத்தியே மஹிந்தானந்த அளுத்கமகேயின்‌ அரசியல்‌ இருந்துவந்தது. முன்னர்‌ கண்டி ஒரு பகுதி சிங்களவர்கள்‌ மத்தியில்‌ ஏ.சி.எஸ்‌.ஹமீதுக்கே செல்வாக்கு அதிகரித்து இருந்தது. பின்னர்‌ அது படிப்படியாக மாறி மஹிந்தானந்தவின்‌ கைக்கு மாறியது. இன்று ஐக்கிய மக்கள்‌ சக்‌தியின்‌ தலைமைத்துவம்‌ சஜித்துக்கு கிடைத்‌திருக்கின்ற நிலையில்‌ தமது வாக்குகள்‌ ஐக்கிய மக்கள்‌ சக்திக்கு சென்றுவிடலாம்‌ என்‌கின்ற அச்சம்‌ தோன்றியிருக்கலாம்‌. எனவே, மஹிந்தானந்தவும்‌ இனவாதத்தை கையில்‌
எடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல்‌ விமார்சனமொன்று தெரிவிக்கின்றது.

இது இவ்வாறிருக்க மஹிந்தானந்த அளுத்கமகே அரசியல்‌ பழிவாங்கலை மேற்கொள்வதாக முன்னாள்‌ மத்திய மாகாண சபை உறுப்பினர்‌ நயீமுல்லாஹ்‌ தெரிவித்தார்‌.

“கடந்த பாராளுமன்றத்‌ தேர்தலிலும்‌ உள்ளுராட்சித்‌ தேர்தலிலும்‌ ஜனாதிபதித்‌ தேர்தலிலும்‌ நாவலப்பிட்டி தொகுதியை மஹிந்தா னந்தவால்‌ வெற்றிகொள்ள முடியவில்லை. இதற்கு சிறுபான்மையினரே காரணம்‌ எனஅவர்‌ நினைக்கிறார்‌. இதனை பழிதீர்ப்பதற்‌காகவே முஸ்லிகள்‌ மீது வீண்‌ குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்‌” என்றார்‌.

அத்துடன்‌, ஊரடங்கு சட்டம்‌ குறித்து மக்களிடம்‌ தெளிவு இருக்கவில்லை. ஆரம்பத்தில்‌ நகர்புறங்களில்‌ வாழ்வோர்‌ ஆங்காங்கே சுற்றித்‌ திரிந்தனர்‌, அது முஸ்லிம்கள்‌ மட்டும்‌ என்று சொல்வதுதான்‌ பிழையான விடயம்‌. மஹிந்தானந்த முஸ்லிம்களுக்கு எதிரானவர்‌ என்றும்‌ சிங்களவர்களுக்கு விசுவாசமானவர்‌ என்றும்‌ காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்‌. இதில்‌அரசில்‌ சுயஇலாபம்‌ கலந்திருப்பதாகவும்‌ நயிமுல்லாஹ்‌ குற்றம்‌ சுமத்தினார்‌.

எவ்வாறிருப்பினும்‌ நாட்டில்‌ ஒரு அசாதாண நிலை ஏற்பட்டிருக்கும்‌ நிலையில்‌ அனைவரும்‌ இணைந்தே அதற்கு முகம்கொடுக்க வேண்டும்‌. வெறுமனே முஸ்லிம்கள்‌ மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து விட்டு பொறுப்புகளிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முடியாது. முஸ்லிம்கள்‌ இலங்கை அரசாங்கத்தினாலேயே நிர்வகிக்கப்படுகின்றனர்‌ என்பதை இந்த காபந்து அரசாங்கம்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌. மாற்றாந்தாய்‌ மனப்பான்மை இங்கு இருக்கக்கூடாது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter