சஹ்ரான், ரில்வான், ஆமி மொய்தீன் குறித்து காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தது என்ன ?- முழு தகவல் இதோ !

சஹ்ரான், ரில்வான் மற்றும் ஆமி மொய்தீன் ஆகியோருக்கு  எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் தேடப்பட்ட காலத்தில் ரில்வான் இரகசியமாக வந்து சென்றுள்ளார், ஆனால் சஹரான் வந்தாரா என்ற தகவல் எவையும் கிடைக்கவில்லை என காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி கஸ்தூரி ஆராய்ச்சி தெரிவித்தார். சஹ்ரான் குழுவுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட  13 நபர்களும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் சாட்சியமளிக்கையில் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி கஸ்தூரி ஆராய்ச்சியிடம் விசாரணை நடத்தியது. இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறியதானது,

நான் 2017 ஓகஸ்ட் மாதம் காத்தான்குடி பிரதேச பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டேன். எனது பொறுப்பில் இருந்த காலத்தில் காத்தான்குடியின் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளோ அல்லது எந்த அடிப்படைவாத செயற்பாடுகளோ இடம்பெறவில்லை. மிகவும் அமைதியாகவே இருந்தது. இன்றும் அவ்வாறே இருக்கின்றது. எனினும் 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் காத்தான்குடியில் மிகவும் மோசமான நிலைமைகள் இருந்ததாக நான் அறிந்துகொண்டேன்.

குறிப்பாக சஹ்ரான் குழுவினர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பள்ளி தொழுகைகள் முடிந்த பின்னர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற முறைப்பாடு இருந்தது. எனினும் நான் இருந்த காலத்தில் சஹ்ரான், ரில்வான் மற்றும் ஆமி மொய்தீன் ஆகியோர் ஊரில் இருக்கவில்லை. அதற்கு முன்னர் இடம்பெற்ற கலவர செயற்பாடுகளில் இந்த குழுவுடன் தொடர்புபட்ட 13 நபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பின்னர் இந்த நபர்களில் இருவர் உயிரிழந்தனர். அதில் சஹ்ரானின் தந்தை மற்றும் சகோதரர் இருந்தனர். ஏனைய நபர்களும் இந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக 64 பேர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டனர்.

சஹ்ரான் மற்றும் ஏனைய இருவர் மீதான பிடியாணை இருந்ததுடன் நீதிமன்ற விசாரணைகள் இருந்தது. ஆனால் இவர்கள் மூவரையும் கண்டறிய முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் இவர்களை தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இவர்கள் சிக்கவேயில்லை. தடுப்புக்காவலில் இருந்து 13 பேரும் பின்னர் ஒரு வருடத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மாதம் ஒருமுறை பொலிஸ் நிலையத்திற்கு வந்து கையொப்பமிட வேண்டும். அதனை தவறாது அவர்கள் செய்தனர். இவர்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் மததிற்கு எதிரான அதேபோல் ஏனைய மதங்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் சஹ்ரான் இவர்களை வழிநடத்தியிருந்ததுடன் அவர் மௌலவி இல்லை என்ற முறைப்பாடுகள் ஆரம்பத்தில் பதிவாகியிருந்தது. மேலும் இவர்களுடன் பொலிஸ் அதிகாரிகள் எவரும் தொடர்பில் இருந்தார்களா என்ற காரணி எனக்கு தெரியாது. ஆனால் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இவர்கள் தொடர்ச்சியாக தேடப்பட்டு வந்த நபர்கள். எனவே அதற்கான வாய்ப்புகள் இருக்காது என்றே கருதுகிறேன்.

மேலும் 17 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்ததாக முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றது. உரிய காணியில் உரிமையாளர் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார். ஆனால் அங்கு சென்று பார்த்த போது அது தீப்பிடிக்கவில்லை வெடித்தது என்பது தெரிந்தது. இதன் பின்னர் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. எனினும் இதில் பயன்படுத்திய இராசாயன வெடிப்பொருள் என்ன என்பது தெரியவில்லை. அத்துடன் இவர்கள் ஆரம்பத்தில் இருந்து வாகனங்களை வாடகைக்கு பெற்றே பயன்படுத்தியுள்ளனர்.

ஆகவே அது குறித்து சரியாக தகவல் பெற முடியவில்லை. அதேபோல் காத்தான்குடியில் இவர்களின் பயிற்சி முகாம் இருந்ததாக கூறினாலும் அது பயிற்சி முகாம் என்று உறுதியான தகவல் இல்லை. எனினும் இந்த நிலையத்தின் உரிமையாளர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ரில்வான் இவரை சந்தித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. எவ்வாறு இருப்பினும் பிடியாணை காலத்தில் ரில்வான் இரகசியமாக வந்து சென்றார் என்று தெரிகின்றது. ஆனால் சஹ்ரான் வந்தாரா என்று தெரியவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/58523

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter